பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 வதற்கும் வேற்றுமையுண்டு. குறித்த பிரதேசங்களில் இரு கட்சியார்களும் நின்றுகொண்டு கோடு கிழிப்பதில், அந்தந்த இடத்தின் தன்மையைப் பொறுத்து இரு பக்கத்தாரும் சிறிது சிறிது விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரிடம் ஒரு நாட்டுடன் சேர்ந்திருப்பது நலமென்று இரு திறத்தாரும் எண்ணினால், அதை அவ்வாறே சேர்க்க வசதிப்படும். அவ்வாறு செய்துகொள்வது எல்லை மாற்றமாகாது; எல்லையை ஒழுங்கு படுத்தி, உறுதிப் படுத்திக்கொள்வதாகும். இவ்வாறு உறுதிப் படுத்திக்கொள்ள இதுவரை இந்தியா பற்றி வரும் எல்லைக் கோட்டையே ஆதாரமாகக் கொள்ள வேண்டுமென்பதை இந்திய அரசு வற்புறுத்தி வந்திருக்கிறது. 1959, செப்டம்பர் 26-ந் தேதி இந்தியப் பிரதமமந்திரி சீனப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இதைப் பின்வருமாறு தெளிவாகத் தெரிவித்துள்ளார்:

“சீன-இந்திய எல்லையில் மலைப்பகுதி பல இடங்களில் தரையில் எல்லை குறிக்க இயலாதபடி அமைந்திருப்பதால், சில இடங்களில் சிறு மாறுதல்கள் அவசியமாயிருக்கலாம். அவற்றைப் பற்றி விவாதிக்க இந்திய அரசாங்கம் தயாராயிருக்கின்றது. ஆனால் மொத்தத்தில் எல்லை தெளிவானது. தகராறுக்கு இடமில்லாதது என்ற அடிப்படையின் மீதே எத்தகைய விவாதமும் நடைபெற முடியும். பல ஆண்டுகளாகவும், சில இடங்களில் நூற்றாண்டுக்கணக்காகவும் இந்தியப் பகுதிகளாக இருந்து வரும் பிரதேசங்களில் சீனா 50,000-சதுர மைல்கள் கோருவதை இந்திய அரசு விவாதிக்க முடியாது. முன்னாளில் சீனாவுக்கு எதிரான பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பிலிருந்து சுதந்தர இந்திய அரசாங்கம் நன்மையடையப் பார்க்கிறது என்று கூறுவது பொய்; மேலும் அது இந்தியாவில் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது."

35