பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை

பான்மை குறித்தும், தமிழர்களில் ஒரு சிலர் தமிழின் பெருமை அறியாதிருக்கும் அவலநிலை குறித்தும் எழுதியவர் 'உரைவேந்தர்' என ஊரும் உலகமும் போற்றும் ஒளவை சு. துரைசாமி பிள்ளையாவார்!

பிறப்பும் படிப்பும்

‘சான்றோர் உடைத்து தொண்டைநாடு’ என்பது பழமொழி. இந்நாட்டின்பாற்பட்ட தென்னார்க்காடு மாவட்டம், புலவர் பெருமக்கள் தோன்றிய சிறப்புக்குரியது. இம்மாவட்டத்தில், திண்டிவனத்திற்கு அண்மையில் அமைந்திருப்பது, ‘ஒளவையார் குப்பம்’ என்னும் சிற்றுர், அவ்வூரில், கருணீகர் (ஊர்க் கணக்கர்) மரபில் தோன்றியவர் சுந்தரம்பிள்ளையாவார் என்பார்.

இவர்,தமிழின்மீது அளவற்ற அன்புடையார் மயிலம் முருகன்மீது, பல செய்யுள் நூல்கள் இயற்றிய மாண்பினர். இவருக்கு அருமை வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தவர் சந்திரமதி அம்மையார். இவர்களின் இல்லறப்பயனாய்ப் பெற்ற மக்கள் ஐவர். அவர்கள் முறையே மயிலாசலம், முத்துக்குமாரசாமி, சுப்பிரமணியம், பூமாதேவி, துரைசாமி என்னும் பெயரினர். பூமாதேவியும், துரைசாமியும் இரட்டைப் பிள்ளைகள்.

5.9.1902இல், தோன்றிய அந்த ஐந்தாங் குழந்தையே ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமிபிள்ளையாவார்! பெண் குழந்தை பூமாதேவி இயற்கை எய்திவிட்டது!

உரைவேந்தர், தாய்ப்பால் இல்லாமல் வளர்ந்த பிள்ளை. ‘தமிழ்ப்பாலில் திளைக்கப் போகும் இவர்க்குத் தாய்ப்பால் எற்றுக்கு?’ என இறைவன் கருதினன் போலும்!

இக்குழந்தை,பிற்காலத்தில் தமிழகத்தில், உரைஉலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கப் போகிறது என்று கருதித்தான் இறைவன் ‘ஒளவை’ என்னும் சொல்லை முதலாகவுடைய ஊரில் இந்தச் செந்தமிழ்ச் செல்வம் பிறக்குமாறு செய்தனன் எனலாம்!

உள்ளுரில் தொடக்கக் கல்வி கற்ற உரைவேந்தர், திண்டிவனத்தில் இருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் (அப்போது ஏ.ஏ.எம். உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்பட்டது; பின்பு வால்டர்ஸ் கடர் உயர்நிலைப் பள்ளி) பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று சிறப்பாகத் தேறினார்.