பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைநயம் கண்ட உரவோர்

67


இயல்பாதலின், ஊழை உப்பக்கம் காண்பது உயிர் கட்கு இயல்வ தொன்றாயிற்று. ஆகவே ஊழ்வினை தனக்குரிய பயனை ஊழ்த்து நல்குவதில் பெருவலி இயற்கை அறமாக உடைய தென்பதும், எனினும், மாறுபட்ட வினையால் அவ்வலி தடையுற்று நின்று வற்றும் என்பதும் முடிவாயின!”

(1954 இல் எழுதிய கட்டுரை)

வரலாறு உரைத்தல்

“பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறை புலமை பெற்றவர் ஔவை துரைசாமி அவர்கள்!”

என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் கூறுவதற்கேற்பப் பல்துறை வல்லுநராக விளங்கிய உரைவேந்தர், தம் பேருரை பலவற்றில் ஆங்காங்கு வரலாற்றுச் செய்திகளைக் கூறாமலிரார். இங்கே ஒரு சான்று:

சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் மணிமுடியாகத் திகழும் ‘சிவஞான போத’ நூலின் ஆசிரியர், அருளாளர் மெய்கண்டாரின் தந்தை பெயர் ‘அச்சுதக் களப்பாளர்’ என்பது. இச் சொல்லை வைத்துக் கொண்டு, ‘மெய்கண்டார், களப்பிரர் வழியில் வந்தவர்’ என்று சிலர் கூறியதும் உண்டு. இதனை உரைவேந்தர், வரலாற்றுச் சான்று காட்டி மறுக்கின்றார்.

“...இடைக்காலத்தே நம் தமிழகத்தை ஆண்ட வேந்தர்பால் அரசியற் பணிபுரிவோர், ‘களப்பாள ராயர், பல்லவராயர், வாணாதிராயர், மழவராயர், சேதிராயர்’ என்பன முதலிய சிறப்புப் பெயர்களை வேந்தரால் தரப்பெற்றனர். இடைக் காலத்தே இந்த நாட்டில் ‘களப்பிரர், பல்லவர், வாணர், மழவர்’ முதலியோர் ஆட்சி செய்தனர். பல்லவராட்சி வீழ்ந்ததும் பாண்டியரும் சோழரும் நாட்டாட்சி பெற்றனர். அக்காலையில் அவர்கள், அரசியல் வகையிலும், பிற வகையிலும் சிறந்த பணிசெய்த சான்றோர்க்கு, மேலே சொன்ன சிறப்புப் பெயர்- களைத் தந்து சிறப்பித்தனர். களப்பிரரை வென்று