பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நற்றமிழ் நாவலர்

91

முடிப்பார். இதனால் சொற்பொழிவின் இறுதியில் வந்தவர்கூட ‘இவர் என்ன பேசினார்’ என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இது, திரு.வி.க. பாணி!

உரைவேந்தர், தமிழகத்தில் பேசாத இலக்கிய மேடையோ, சமய மேடையோ இல்லை எனுமளவுக்குப் பல்வேறு கூட்டங்களில் தலைமை தாங்கியும், விரிவுரையாற்றியும் மக்களை மகிழ்வித்தவர். இவருடைய உரைவீச்சுகள் பல. குறிப்பெடுப்பாரின்றிக் காற்றோடு காற்றாய்ப் போய்விட்டன. ஒன்றிரண்டு மட்டும் அச்சு வடிவம் பெற்றுள்ளன.

1940ஆம் ஆண்டில், ஆம்பூர் சைவ சித்தாந்த விழாவில், ‘சிவபுராணம்’ என்ற பொருள் பற்றி உரைவேந்தர் ஆற்றிய பேருரை, சிறுநூல் வடிவம் பெற்றுள்ளது.

மாணிக்கவாசகர் அருளிய ‘சிவபுராணம்’ 95 அடிகள் கொண்டது. இதனை 9 உட்பரிவுகளாகப் பகுத்துக் கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார் உரைவேந்தர்.

‘புராணம்’ என்ற சொல்லைக் கேட்டதுமே, ‘அது ஒரு குப்பை’ என்றுதான் பலரும் ஒதுக்குவர்; வெறுப்பர். ஆனால் மணிவாசகர் அருளிய இச் ‘சிவபுராணம்’ அப்படிப்பட்டதன்று. இதனை உரைவேந்தர் கூறும் விளக்கமே தனி:

“இக்காலத்தே நிலவும் புராணங்களுட் பல, இக்கால மக்களின் கருத்துக்கு ஒவ்வாத நிலையில் இருப்பது கொண்டு, இக்காலத்தவர்க்குப் புராணம் என்ற சொல்லே அருவருப்பைப் பயந்து நிற்கின்றது. அதனால் சிலர், ‘சிவபுராணம்’ என்பதும் அப் புராணங்களுள் ஒன்றே எனக் கருதித் தவறு கூறுகின்றனர். அவர்கள் இதனை ஒருமுறை கருத்தூன்றிப் படிப்பரேல் தம் தவற்றுக்கு வருந்துவர். எதிர்காலத்தே இவ்வாறு கூறுவோரும் உளராவர் என்று கருதியோ, என்னவோ, அடிகளார், இச்சிவபுராணத்தின் முடிப்புரையில், ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் உளராதல் வேண்டும்’ என வற்புறுத்தியுள்ளார் என நினைக்க வேண்டி இருக்கிறது!”

என்பது இவரது சொற்பொழிவின் முன்னுரை.