பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

45


பஸ்கிப் பயிற்சிகள்

பைதக் (Baithak) என்ற அழைக்கப்படுகின்ற பயிற்சிகளை, நாம் பஸ்கி என்று அழைத்து வருகிறோம். பஸ்கி என்றால்தான் புரியும் என்ற அளவிற்கு இந்திய மக்களிடையே இப்பயிற்சி முறை புகழ் பெற்று விளங்குவதால், நாமும் பஸ்கி என்றே அழைக்கின்றோம்.

பஸ்கிகள் என்றால் முழங்கால்களை நன்கு, அதாவது முழுமையாக மடக்கிச் செய்யும் பயிற்சிகள் என்கிற அமைப்புடையனவாக இருக்கின்றன. இப்பஸ்கிப் பயிற்சிகள் தண்டால் பயிற்சியுடன் இணைந்து, முழு உடலுக்கும் முழுமையான பயன்களையும், வனப்பையும் அளிப்பனவாக உதவுகின்றன.

தண்டால் பயிற்சிகள் கைகளுக்கும் மார்புத்தசைப் பகுதிகளுக்கும் வலிமையும் செழுமையும் தருகின்றன என்றால், பஸ்கிப் பயிற்சிகள் தொடைத் தசைகளுக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கும் வலிமையும் வடிவமும் (Shape) கொடுக்கின்றன. இவ்விரு தண்டால் பஸ்கிப் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்ததால்தான், இந்திய நாட்டு மல்யுத்த வீரர்கள், உலக மல்யுத்த அரங்கிலே உன்னதமான புகழையும், தலைமை சார்ந்த இடத்தையும். வீறுமிக்க வெற்றிகளையும் பெற்று வந்தார்கள். அவர்கள் வெற்றியின் இரகசியத்தையும் உலகம் உணர்ந்த காலம் அது.

நம்நாட்டு மல்யுத்த வீரர்கள் அகன்ற மார்பும். திரண்ட கைத்தசைப் பகுதிகளையும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளித்தார்கள் என்கிற பொழுது, அவர்களது கெண்டைக்கால் தசைகளும், தொடைத் தசைகளும் தேவையான அளவு வளர்ச்சியும் எழுச்சியும் பெற்றிருந்தன.