இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்
65
✽ உடலுக்கும் மனதுக்கும் ஒப்பற்ற சுறுசுறுப்பு (Alertness) கிடைக்கிறது.
✽ உடலுறுப்புக்களை விருப்பம்போல இயக்கி, ஒரு நிலைப்படுத்திச் செய்வதால், உடல் இயக்கத்தில் கட்டுப்பாடு (Control) கிடைக்கிறது.
✽ உடலை மாறுபட்ட முறையில் நிறுத்திவைத்து இயக்குகின்ற நேரத்தில், உடல் சமநிலை இழந்து போகாமல் சமநிலை (Balance) யுடன் சாகசமாகச் செய்கின்ற ஆற்றலையும் வளர்க்கிறது.
✽ கடினமான இயக்கமுறைகளைத் தொடர்ந்து செய்கிற பொழுது, உடலுறுப்புக்கள் வலிமை (Strength) அடைகின்றன.
✽ உடலுறுப்புக்கள் வலிமை அடைவதால், மீண்டும் செய்கின்ற திடமும், உறுதியும் (Steadiness) செய்பவருக்கு வந்து விடுகின்றது.
✽ திடமும் உறுதியும் தொடர்ந்து கிடைக்கும் பொழுது, இதன் மூலம் திடசித்தம் அதாவது மன உறுதியும் (Power of mind) பின் தொடர்கிறது. அதனால் பெறும் பயன் மிகுதிதான்.
✽ இவ்வாறு செய்கின்ற செயல்முறைகளின் சாகசம் மட்டுமல்ல, ஆண்மையும், அஞ்சாமையும் (Daring) கிடைக்கின்றன.
ஆகவே, சாகசச் செயல்களை செய்கின்றவர்கள் இத்தகைய அரிய பயன்களைப் பெறுவதுடன். ஆனந்தமாகவும் பொழுதைக் கழிக்கின்றனர் என்பதை உணர்ந்து. இதில் அற்புதமாக ஈடுபட்டு, அளவற்ற பயனைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.