உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

11


கூடியவர்கள் யாரும் திறமைசாலிகள் இல்லை என்பதை நான் தெளிவாக – திட்டமாக சொல்லுகிறேன்.

“அந்த நாளிலே எங்களை எதிர்த்தவர்கள் யார்? இந்தியத் துணைக்கண்டத்திலேயே அரசியல் தந்திரத்தில் தன்னை நிகர்த்தவர் யாருமில்லை என்றப் பட்டப் பெயர் பெற்ற இராசகோபால ஆச்சாரியார் எங்களை எதிர்த்தார்.

“அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறந்த பொழுது, இலவம் பஞ்சுகள் இன்றையத் தினம் எங்களை அடக்கலாம் என்று கருதினால் உண்மையிலேயே அது நடக்கக்கூடிய காரியமல்ல. இந்தியைப் புகுத்துவதற்கு யாராவது ஒருவர் இந்தியத் துணைக் கண்டத்தில் துணிவோடு காரியம் செய்தாரென்றால், ஆச்சாரியார் ஒருவர்தான் செய்தார். கட்டாயமாக இந்தியைப் பள்ளிகளில் புகுத்துவேன் என்றார்; ஒரு புறத்திலே பெரியார் இராமசாமியும், மற்றொரு புறத்திலே பாரதியாரும் இன்னொரு புறத்திலே பன்னீர்செல்வமும், மற்றொரு புறத்திலே அருணகிரி அடிகளும் மற்றவர்களும், முழக்கம் செய்த நேரதில் ‘யார் இந்த நாட்டை ஆளுகின்றவர்கள்? நானா, இராசாமி நாயக்கரா,பார்த்துவிடுகிறேன்” என்றார். நான் அவருடைய வீரப்பிரதாபம் பலிக்காமல் போய்விட்டது என்று ஏச்சுக்குச் சொல்லுகிறேன் என்று கருதாதீர்கள். காலம் எந்த அளவுக்குக் கனிந்துள்ளது என்ற பேருண்மையை உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால் கட்டாய இந்தியைத் துணிவோடு புகுத்திய ஆச்சாரியார்தான் இன்றையத் தினம் ‘கட்டாயமாக இந்தி நுழையக்கூடாது’ என்று நாட்டிலே முழக்கம் செய்து வருகிறார். இந்தி எதிர்ப்பிலே அருணகிரி அடிகளைச் சிறைச்சாலைக்கு அனுப்பியவரும், என்னை சிறைச்சாலைக்கு அனுப்பியவரும் பெரியார் இராமசாமியை பெல்லாரி சிறைக்கு அனுப்பி, ‘அது மிகவும் வெப்பமுள்ள இடமாயிற்றே, தள்ளாத வயதிலே அங்கு அனுப்பலாமா’ என்று சட்டசபையிலே கேட்டால், உங்களுக்குப் பெரியாரைத் தெரியாது; எனக்கு தெரியும். அவருடைய உடம்புக்கு வெயில் நல்லது’ என்று வேடிக்கை-