உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

19


யாகக் கொடுக்கவில்லை. வழக்கறிஞரின் வாதத்திலே ஒன்றும் தப்பு இல்லை. அந்தத் தீர்ப்புக் கிடைத்து, வீடு உன்னுடையதா? என்னுடையதா ? என்று ஏற்பட்டப் பிறகல்லவா உன்னுடைய விருப்பப்படி வாசற்படி இருப்பதா? என்னுடைய விருப்பப்படி வாசற்படி இருப்பதா? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அதைப்போல இந்தியா ஒன்றாக இருப்பதா? அல்லது இந்தியா என்பது கற்பனையிலே உதித்தது. வெள்ளைக்காரன் ஈட்டி முனையினாலே கட்டிக் காப்பாற்றப்பட்டது; அதைக் கதர் நூலினாலே கட்டி வைத்தால் நீண்ட காலத்துக்கு நிலைக்காது: ஆகையினால் இந்தியா என்பது இனவழி பிரிந்துதான் தீருமென்ற எங்களுடைய இலட்சியம் வெல்கிறதா? இல்லையா என்பதற்கு அவகாசம் தர வேண்டும். அது முடிந்த பிறகு நாங்கள் தோற்றோமென்றால் ‘திராவிட நாடு கிடைக்காது’ என்று நாங்களே சொல்லிவிட்டால், ‘இந்தியா ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்’ என்று நாங்களும் சேர்ந்து சொன்னால், ஒன்றாக இருக்கிற இந்தியாவுக்கு ஏதாவது மொழி வேண்டாமா? அப்பொழுது கூட இந்தி அல்ல: ஏதாவது ஒரு மொழி வேண்டாமா என்பதுதான் அப்பொழுது பிரச்சினை.

“ஓட்டலுக்குப் போகின்ற நேரத்தில் ‘சாப்பாடு ஆகிவிட்டதா?’ என்று கேட்ட பிறகுதான் ‘என்ன சமையல்? என்று கேட்பார்களே தவிர, ‘என்ன சமையல் இன்றையத்தினம்? – கத்தரிக்காய் கூட்டு; முருங்கைக்காய் சாம்பார்’ – ‘சரி போடு’ ‘இன்னும் ஆகவில்லை’ என்று சொல்லுவதைப்போல் திராவிட நாடு பிரிவினை தீராமலிருக்கின்ற பொழுது உனக்கென்ன அத்தனை அவகாசம்? திராவிட நாடு பிரிவினைக் கிளர்ச்சி வலுக்கின்றது. அந்த வலுக்கின்ற கிளர்ச்சியை ஒழிக்கின்ற, நீ செய்கின்ற சதித் திட்டங்களிலே இது ஒன்று என்பது தவிர, இது மொழித் திட்டம் அல்ல என்பதை நான் பகிரங்கமாகக் குற்றம்காட்ட விரும்புகின்றேன்.

“வடநாட்டிலே உள்ளவர்கள், தென்னகத்தாரை – தமிழகத்தாரை, சிறப்பாகவும் குறிப்பாகவும் திராவிட இயக்-