உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'இந்தி' பொது மொழியா?

21


வாருரை மெய்யாகா தென்பதும், ஆகவே இத்தென்னாட்டவர் இந்தியைப் பயிலுதலால் அதனுதவி கொண்டு வட நாட்டவரெல்லாரோடும் உரையாடி உறவாடல் இயலாதென்பதும் நன்கு விளங்கா நிற்கும்.

அஃதுண்மையே யாயினுங், கபீர் தாசர் முதலான புலவர்கள் பாடியிருக்கும் பாடல்களைப் படித்து இன்புறுதற்காவது, இந்திமொழிப் பயிற்சி உதவி செய்யுமன்றோவெனின்; தமிழ்மொழியிலுள்ள பழைய இலக்கியங்களைப் பயின்றறியாதார்க்கு, இந்திமொழிப் புலவர்கள் பாடிய பாட்டுகள் இனிக்கு மேனுங், கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், தேவாரம், பெரியபுராணம், சிவஞானபோதம் முதலிய ஒப்புயர்வில்லா நூல்களைப் பயின்று அவற்றின் அமிழ்தன்ன சுவையில் ஊறப்பெற்ற மெய்யறிவினார்க்கு, அவ்விந்திமொழிப் பாட்டுகள் இனியா. மேலும், வடநாட்டு இந்தி முதலான மொழிகளின் பாடல்களிற் பெரும்பாலன, நம் போற் பலபிறவிகள் எடுத்துழன்று இறந்துபோன சிற்றரசர்களான இராமன், கிருஷ்ணன், பலராமன், வசுதேவன் முதலானவர்களைக் கடவுளாக வைத்து உயர்த்துப் பாடியிருத்தலால், அவை பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாகிய எல்லாம்வல்ல சிவத்தை மக்கள் அறிந்து வழிபட்டுத் தமது பிறவியைத் தூய்மை செய்து உய்தற்குதவி செய்யாமையோடு, அவை உண்மைச் சிவ வழிபாட்டை அவர் அடையவொட்டா மலுந் தடைசெய்து மக்கட் பிறவியைப் பாழாக்குகின்றன. மற்று, மேற்காட்டிய தமிழ் நூல்களோ மெய்யான ஒரு தெய்வம் சிவமேயா தலை விளங்கத் தெருட்டி மக்களுக்கு மெய்யறிவையும் மெய்யன்பையும் ஊட்டி, அவர் இம்மையிலும் மறுமையிலும் அழியாப் பேரின்பத்திற்றிளைத்திருக்குமாறு செய்து, அவரது பிறவியைப் புனிதமாக்குந் திறத்தன. அதுவல்லாமலும், இந்தி முதலான வட நாட்டு மொழிகள், தமிழைப்போற் பழையன அல்லாமையாலும்; அவற்றை வழங்கும் மக்கள், பழைமைதொட்டு