உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 'இந்து' தேசியம்

கல்வெட்டிலும் அதனை இடம் பெறச் செய்தவர்.
இவ்வாறு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, இந்தியத் தேசியம் என்பது தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களையும், பார்ப்பனரல்லாத அறிவாளிகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ள இயலாமல் தடுமாறி நிற்பதைப் பார்க்கிறோம்.
இந்திய தேசியம் என அடையாளம் காட்டப்பட்ட மொழி, நிலம், பண்பாடு ஆகியவை தமக்குரியவை அல்ல என எண்ணும் போக்கும், பார்ப்பனர் மீதான நம்பிக்கையின்மையும் தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களிடத்திலே படிந்திருந்ததே அதற்குக் காரணமாகும். ஆனால் இந்திய தேசியத்திற்கு மாற்றான ஒரு கருத்தியலை வடித்தெடுப்பதற்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிவரை அவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் இந்திய தேசியத்துக்கு மாற்றான உணர்வுகளுடன் கூடிய, ஒரே தலைவராக அயோத்திதாசப் பண்டிதர் மட்டுமே இருந்தார். ஆனால் ஒரு தேசிய இனத்தை முதலில் அடையாளம் காட்டும் மொழித் துறையில், அறியப்பட்ட அறிவாளிகள் சிலர் இருந்தனர். கனக சபைப்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, ஜி.யு.போப், உ.வே.சாமிநாதையர் போன்றோர் வேதமல்லா மரபு (Non-vedic Tradition) : சார்ந்த தமிழிலக்கியங்களை அச்சிட்டு வெளிப்படுத்தியிருந்தனர்.
இவர்களில் மறைமலையடிகள், ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளை போன்ற சைவ அறிஞர்கள் வேதமல்லா மரபு பற்றிய அறிவும் பார்ப்பன எதிர்ப்புணர்ச்சியும் உடையவர்களாக இருந்தனர்.
1908இல் இந்திய தேசிய காங்கிரசைப் பார்ப்பனர் காங்கிரஸ் என்று தன் தமிழன் பத்திரிகையில் எழுதிய அயோத்திதாசப் பண்டிதர் 1909இல், 'பார்ப்பனர் எதிர்ப்பும் வேதங்களின் எதிர்ப்பும்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் ஒன்றைத் தலைமையேற்று நடத்தினார். வடமொழி, வேத எதிர்ப்பு உணர்ச்சியே அவரது பௌத்த மத ஈடுபாட்டிற்குக் காரணம் என்று ' கருதலாம்.
வேதப்பெருமை, வேதியர்பெருமை. வடமொழி உயர்வு. வருணாசிரமத்தின் சிறப்பு, இந்திய நாகரிகம் போன்ற கருத்தாக்கங்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆல்காட்டும் பிளாவட்ஸ்கியும் எதிர்நிலையாகத் தமிழர்களை எழுப்பியதுபோல் இருபதாம் நூற்றாண்டில் அந்தத் திருப்பணிக்கு அன்னிபெசன்ட் (1847-1933) என்ற ஐரிஷ் பெண்மணி வந்து சேர்ந்தார். அவருடைய (Hicne. Rule) தன்னாட்சி இயக்கமும் 'புதிய இந்தியா' (New India) இதழுமே திராவிட இயக்க முன்னோடிகளான டி.எம்.நாயர். பிட்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/65&oldid=1703804" இலிருந்து மீள்விக்கப்பட்டது