பக்கம்:இன்னமுதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 ●

இன்னமுதம்



இச்சிறப்பு உண்டாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் நமது முன்னோர்களாகிய நாயன்மார்களும், ஆழ்வார்களுமே. பக்தியில் மூழ்கித் திளைத்த அவர்கள், காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கிப் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடினர். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக, முன்னணியில் விளங்கியவர் திருஞானசம்பந்தப் பெருமான். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சிறிய பெருந்தகையாரை அடியொற்றி வந்த ஏனைய நாயன்மார்கள், பனிரெண்டாம் நூற்றாண்டுவரை பாமாலைகளாகப் பாடி இறைவனுக்கு அணிவித்தார்கள். அப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன.

திருஞானசம்பந்தர் பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாகவும் திருநாவுக்கரசர் பாடல்களை அடுத்த மூன்று (4,5,6) திருமுறைகளாகவும், சுந்தரர் தேவாரத்தை ஏழாவது திருமுறையாகவும், மாணிக்க வாசகப் பெருமான் "திருவாசகத்தை" (திருக்கோவையார் உள்பட) எட்டாவது திருமுறையாகவும், 'சேந்தனார்' முதலியவர்கள் அருளிச் செய்த 'திருவிசைப்பா திருப்பல்லாண்டு' இரண்டையும் ஒன்பதாவது திருமுறையாகவும் திருமூலர் அருளிச் செய்த 'திருமந்திரம்' என்னும் நூலைப் பத்தாம் திருமுறையாகவும், சேரமான் பெருமான் நாயனார், காரைக்கால் அம்மையார் முதலானவர்கள் அருளிச் செய்த பாடல்களைப் பதினொன்றாம் திருமுறையாகவும், சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணத்தைப் பனிரெண்டாம் திருமுறையாகவும் வகுத்துள்ளார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/8&oldid=1350699" இலிருந்து மீள்விக்கப்பட்டது