பக்கம்:இன்னொரு உரிமை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190  சு. சமுத்திரம்


வேலையில் சேர்ந்த ஒரு வருடத்துக்குள்ளேயே அலுவலகத்துக்கு வருகை தரும் மேல் அதிகாரிகளிடம் உள்ளதை உள்ளபடி சொல்லி அவர்களது சினத்தையும் யூனியன் அதிகாரிகளின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்ட இவர் ஒரு சமயம் லட்சிய மரத்தின் உச்சாணிக் கிளைக்குப் போய் அங்கே இருந்து உலுக்கப்பட்டுக் கீழே விழுந்தார். விழுந் தவர் விழுந்தவர்தான். இன்னும் எழவில்லை. அதாவது பஞ்சாயத்துக் கவுன்சில் ஹாலில் கூடிய கூட்டமொன்றில் ஒரு தலைவர் பாரதம் கிராமங்களில் வாழ்கிறது என்பதை மறக்கக்கூடாது' என்றபோது இவர் - 'ஆனால் நாம் கிராமங்களில் சேரிகள் செத்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டோம்' என்று ஆவேசமாகச் சொன்னபோது அந்த ஆவேசத்தில் ஆக்ரோஷமான அதிகாரிகளால் அவரது அந்தரங்கக் குறிப்பேடு வில்லங்கமாகியது.

இப்படிப்பட்டவர் காதலிக்காமலாவது இருந்திருக்க லாம். சொல்லப்போனால் அவர் காதலிக்கவே இல்லை. ஏகப்பட்ட சொத்திருந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டுக்கு உத்தியோக ரீதியாகப் போய்க்கொண்டிருந்த அவரை, அந்தத் தலைவரின் மகள் கண்ணால் அடித்தாள். இவருக்கும் ஆசை வரப் பார்த்தது. உடனே பயந்துபோய், சொல்லாமல் கொள்ளாமல் வேலையை வேறொரு யூனியனுக்கு மாற்றிக்கொண்டு அவர் போனபோது, அங்கே அவரை வரவேற்றது அந்தப் பெண், பஸ் நிலையத்திலேயே நின்றிருந்தாள். இவர் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. திருமண விபத்துக்கு உள்ளாக்கப்பட்டார். மனைவி போட்டிருந்த முப்பது பவுன் நகைகளை இவர் பஞ்சாயத்து மாமாவிடம் சேர்த்துவிட்டு, லட்சிய இல்லத்தில் இறங்கினார். மகனுக்கு வசதியான இடத்தில் கல்யாணம் செய்து, இதர பிள்ளைகளையும் கரையேற்றக் கனாக் கண்டுகொண்டிருந்த இவரது தந்தை, பிள்ளை வேறே ஜாதியில் திருமணம் செய்ததை அறிந்து கொதித்து தந்தையே மகனுக்குக் கொள்ளி' வைத்தார். மகன் செத்துப்போய்விட்டதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/199&oldid=1369079" இலிருந்து மீள்விக்கப்பட்டது