உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

இன்ப

கள் வெற்றிவாகை சூடி, புலவர்கள் பாட, மகளிர் வாழ்த்த, நகரமே விழாக் கோலங்கொள்ள, பவனிவரும் காட்சியைக் காண உமக்கு விருப்பமில்லையா?

அறி: விக்ரமரே! போர் என்றதும் வீரமுழக்கமும் வெற்விழாவும் உங்களுக்குத் தெரிகின்றன! போரின் முடிவில் “விக்ரமர் ஒரு வீர தீரர்! அசகாயச் சூரன்!” என்று புலவர்கள் பாடுவார்கள்; அரண்மனையில் ஆடல் பாடல்; வெளியிலே வாழ்த்தொலிகள்! இவைகள் மட்டும்தான் உமது காதில் விழுகின்றன! போர் என்றதும், எண்ணற்ற குடும்பங்களில் எழும் அழுகையொலிதான் என் காதில் விழுகிறது! மகனையிழந்த தாய், கணவனையிழந்த மனைவி, தந்தையைக் காணாத சிறுகுழந்தை-இவர்கள் கோவெனக் கதறியழுவது என் காதில் காய்ச்சிய ஈயமெனப் பாய்கிறது! களத்தில் நீங்கள் காணப்போவது என்ன?வெற்றியல்ல, இரத்தம்! வீரமுழக்கமல்ல, வேதனைக் குரல்கள்! வெற்றி வாகை சூடி, வீரர்கள் பவனி வருவார்கள் என்று கூறுகிறீர்கள்! ஆனால், காலிழந்தவர்கள், கண் இழந்தவர்கள், கடும் தாக்குதலுக்கு ஆளாகினவர்கள், தடுமாற்றத்துடன் தள்ளாடித் தள்ளாடி பாதையோரத்தில் வாழ்வின் ஓரத்தில் செல்கின்ற கோரக் காட்சியை நான் பலமுறை கண்டிருக்கிறேன்! அந்த வேதனைக் காட்சிகளை இன்னும் விரிவுபடுத்த நான் முயலமாட்டேன்! எனது மருத்துவக்கலை, எனது கண்டுபிடிப்புகள் மக்களின் நோய் நொடிகளைப் போக்க, வறுமையை நீக்க, பஞ்சைப் பராரிகளுக்கு வாழ்வளிக்க, இன்பமும் அமைதியும் உலகில் நிலைபெற்று வாழப் பயன்படுமேயன்றி, போர்களைத் தூண்டிவிட, போர்களின் கோரத்தன்மையை அதிகப்படுத்த என்றும் பயன்படாது!

விக்: என் கோபத்தைக் கிளறாதீர். பொடி செய்யும் முறை-போருக்கு வேண்டிய உதவி!—மன்னர் கேட்கிறார்...

குமார : நான் கட்டளையிடுகிறேன், உமது நாசப் பொடியைக் கொடுங்கள் என்று!