உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

இன்ப

குணா: ஏனப்பா! நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா?

அறி: இல்லை குணாளா! சரியாகச் செய்திருக்கிறாய். நான் எதிர்பார்த்ததைவிடச் சீக்கிரமாகப் பலன் கைகூடி வருகிறது!

குணா: நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைத்துவிட்டதா?

அறி: அதற்குள் அவசரப்படாதே! எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியில் ஒரு படி முன்னேறியிருக்கிறோம்; அவ்வளவு தான். இனி முடிவை நோக்கிக் கடக்க வேண்டிய படிகள் பல இருக்கின்றன! பயணம் கடுமையானதாயிற்றே!

குணா: அந்தப் பயணத்தில் நானும் உங்களுக்குத் துணையாக இருப்பேன் அப்பா!

[தந்தையும், மகனும் சோதனையைப் பார்த்தபடி நிற்கிறார்கள்.]

காட்சி—13

[ஆய்வுக்கூட அலுவலில் தந்தையும் மகனும் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளனர். காலம் ஓடுகிறது. நாட்டிலே பல்வேறு இடங்களிலே மாறுதல்கள் தெரிகின்றன. கொல்லன் உலைக்கூடத்தில் ஆயுதங்கள் வடித்தெடுக்கப்படுகின்றன. விக்ரமன், வாட்களைச் சுழற்றிப் பார்த்துவிட்டு, திருப்திப்படாமல் வீசி எறிகிறான். விக்ரமன் அமைச்சர் அருளானந்தருடன் பாசறைப் பக்கம், குதிரைமீது செல்கிறான்.]

விக்ர: என்ன, அருளானந்தரே! எனக்குத் திருப்தியாயில்லை, இந்த ஆயுதங்கள்.

அரு: தரமான ஆயுதங்களுக்கான திட்டம் தயாராக இருக்கிறது... ஆனால் போதுமான அளவு பணம் இல்லை... சிரமமாக இருக்கிறது.