உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

41

விக்ர: நாட்டுப் பாதுகாப்பு தமது கடமை என்பதை மறந்தனரோ மக்கள்...நன்றி கெட்ட மக்களய்யா இவர்கள்...

அரு: வரி செலுத்தவும் வாட்டமாம்! தொழில்வளம் குன்றிக்கிடக்கிறதாம்...

விக்ர: மூக்கால் அழுவார்கள்... வேறென்ன தெரியும் இந்த மக்களுக்கு? அருளானந்தரே! அல்லும் பகலும் எந்தநேரமும் திருநாடு கீர்த்தி பெறவேண்டும், மண்டலங்கள் பலவும் அதன் முன் மண்டியிடவேண்டும், வீர வெற்றிகள் பெற வேண்டும் என்பது பற்றித் திட்டம் தீட்டியபடி இருக்கிறேன். இந்நாடு பொன்னாடு ஆகவேண்டும். நன்றி காட்டக் கூடவா மனம் இடம் தரவில்லை.

அரு: மக்கள் தங்களை வாழ்த்தாமலில்லை. விக்ரம பூபதி பெற்ற வெற்றியால்தான், நாடு, அடிமைக்காடு ஆகாமல் இருக்கிறது என்பது பற்றி பெருமையாகத்தான் பேசிக் கொள்கிறார்கள்... நாடு அடிமைக் காடு ஆகவில்லையே தவிர...(விக்ரமன் அருளானந்தரை முறைத்துப் பார்க்க,) நாடு, பூந்தோட்டமாகவில்லையே என்று கவலை...

விக்ர: அருளானந்தரே திருநாடு; வளம் அதிகம் கொண்டதல்ல... தங்கம் விளையும் நாடுகள் உள்ளன... மல்ல நாட்டின் மண்வளம், சொல்லி முடியாதாம்... உம்! என் திட்டப்படி காரியம் நடைபெற்றால், திருநாடு செல்வக்களஞ்சியமாகும்.

காட்சி—14

[ஆய்வுக்கூடத்தில்]

அறிவா: கல்லிலே நார் உரிப்பது போல உழைக்கிறார்கள். மக்கள்..படுகிற பாடு அதிகம்... கிடைக்கும் பலன் குறைவு.

குணா: ஆமப்பா... மிருக வாழ்க்கை என்றுகூடச் சொல்லலாம்...