உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

75

புரோ: இன்றைக்குக் கிரகண நாளாயிற்றே! எப்படி இவாளெல்லாம் வேலை செய்யறாள்?

அறி: கிரகணமென்றால் என்ன?

புரோ: மேதாவியான உங்களுக்குத் தெரியாதா? பூலோகத்தைச் சுற்றிச் சூரியன் வரும்பொழுது, ராகு கேது என்ற பாம்புகள் அதைப்போய்ப் பிடித்துக்கொள்கின்றன.

அறி: முதலிலேயே தப்பு! பூமியைச் சுற்றிச் சூரியன் வரவில்லை; சூரியனைச் சுற்றித்தான் பூமி வருகிறது.

புரோ: தலை கீழான்னா பாடமிருக்கு!

விக்ர: சூரியனைச் சுற்றிப் பூமி வருகிறதா? நீங்கள் சொல்வதைக் கேட்டால் என் தலை சுற்றும் போலிருக்கிறது.

புரோ: நமது முன்னோர்கள் சொல்லாத புதுமையாக இருக்கிறதே! நீங்கள் சொல்வது புனைந்துரையோ, கற்பனையோ? யார் கண்டாள்!

அறி: புனையும், பொருந்தாக் கற்பனைகளும், மூட நம்பிக்கைகளும் நமது மக்கள் உள்ளத்தில் புகுந்த பின்தான் அறிவுண்மைகள் புரியாதனவாகிவிட்டன! நமது முன்னோர்கள்—இயற்கையை நுணுகி ஆராய்ந்த சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்கள், கதிர்ப்பிழம்பைச் சுற்றி இம்மண்ணுலகு வருகிறது என்ற உண்மையை அறிந்திருந்தனர். பாடல் மூலமும் அதை அறிவித்திருக்கிறார்கள்.

"செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்..."

என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார், என்ற புலவர் இதனை அழகாகக் கூறியுள்ளார். கருத்துக் கொவ்வாத கதைகள் புகுந்ததும், அறிவுண்மைகள் மறக்கப்பட்டன. மதியையும் ஞாயிறையும் பாம்புகள் விழுங்குகின்றனவோ