76
இன்ப
என்னவோ! மக்களின் மதியை மடமை யெனும் பாம்பு விழுங்கிவிட்டது! மடமை அகன்றால் நாட்டில் மதிதுலங்கும்; வாழ்வு மலரும்!
புரோ: பாதுகாவலரே! நேக்கு நாழியாயிடுத்து.
விக்ர: உம்மைக் கண்டால், நமது அரண்மனைப் பூஜ்யருக்குச் சற்றுக் கிலிதான்!
அறி: அவர் சிலவற்றைக் கண்மூடித்தனமாக நம்புங்கள் என்கிறார்; நான் ஆராய்ந்து மெய்ப்பொருள் காண்பதறிவு என்று சொல்கிறேன். அவ்வளவுதான்!
விக்ர: மல்ல நாட்டில் படைகள் பெருகுகின்றனவாம்! மருதூர் மன்னன் கோட்டைக் கொத்தளங்களைக் கட்டிய வண்ணமிருக்கிறானாம். நமது ஒற்றர்கள் வந்து சொன்னார்கள்.
அறி: படை பலத்தைப் பெருக்கி என்ன பலன்? போர்க்களத்தில் பெறும் பல வெற்றிகளைவிட, ஆய்வுக்களத்தில் காணும் சிறுவெற்றி அதிகப் பலனைத் தரத்தக்கது!
விக்ர: அதனால்தான் நாம் இந்த ஆய்வுக் கூடத்தை உண்டாக்க அரும்பாடு பட்டோம். விக்ரமா! உன் பாசறை எங்கே என்று கேட்டால், அதோ! இருக்கிற ஆய்வுக்கூடந்தான் என் பாசறை என்று சொல்வேன். உன் படைத்தலைவன் யாரென்றால் வெற்றிகளைத் தரும் ஆற்றல்மிகு படைத்தலைவர் அறிவானந்தர் ஒருவர்தான் என்று தயக்கமின்றி கூறுவேன்.
அறி: தாங்கள் அறிவாராய்ச்சியின் மீதும், என்மீதும் வைத்துள்ள நம்பிக்கை என்றும் வீண்போகாது!
விக்ர: அந்த எரிச்சல் தரும் பொடி தயாரித்தீர்களே! மிக அபூர்வமான சாதனை! அதற்கே உங்களுக்குப் பத்துக் கிராமமும் பிரபுப்பட்டமும் தரலாம். தயாரிப்பது மிகக் கடினமோ?