உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

97

லில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, ஆண்டவனின் அருள் இன்றி இந்த அற்புதமும், இவைபோன்றவைகளும் என்று நம்புகிறோம். இதோ பாருங்கள்! விநாயகரின் துதிக்கையிலிருந்து வெளிவந்த தீச்சுவாலை இப்போது நின்றுவிட்டது. உங்கள் இஷ்டபூர்வமாக இதனை அலங்கரித்திருக்கிறீர்கள். சித்தி விநாயகரின் சித்தம் குளிரும் அளவுக்கு சிங்காரம் இருக்கிறது! தீச்சுவாலையால் கருகியவை போக எஞ்சி இருக்கும் மலர்களிலிருந்து இன்னமும் நறுமணம் கமழ்ந்து கொண்டுதானிருக்கிறது. நீங்கள் இட்ட கட்டளைக்குப் பணிகிறோம். கலனாகி இருக்கும் கோபுரங்களைப் புதுப்பிக்க, கருவூலமனைத்தையும் கொட்டிக் கொடுத்து விடும்படிக் கூறுகிறேன். விக்ரமபூபதி இங்கேயே இருக்கிறார்! இங்கேயே உத்திரவும் பிறப்பிக்கப்படும்!

[என்று கூறிவிட்டு விக்ரமனைப் பார்த்துப் புன்னகை புரிந்துவிட்டு மக்களைப் பார்த்து]

மகேஸ்வரன் அருளால், விநாயகமூர்த்தியின் கடாட்சத்தால் இன்னும் ஒருமுறை, ஒரே ஒரு முறை, இங்கே நின்றபடியே அந்தத் துதிக்கையிலிருந்து நெருப்புக் குழம்பைக் கொட்டச் செய்துவிடுங்கள். எனக்காக அல்ல! இந்த மக்களுக்காகக் கூட அல்ல! திருநாட்டுக் கருவூலத்தைத்திறந்து விடுவதற்காக! தேவாலயங்களுக்கு முன்போல் முழு அதிகாரங்களையும் வழங்கச் செய்வதற்காக! அரசாங்கம் பறித்துக் கொண்ட அனைத்து அதிகாரங்களையும் மீண்டும், திருமுடியாரே! உங்களிடம் திருப்பிக் கொடுப்பதற்காக! இன்னும் ஒரே ஒருமுறை, தீயை அழையுங்கள்! தீத் தேவனைக் கொண்டு வந்து நிறுத்துங்கள்!

திரு: (நடுங்கும் நிலையில்) இதென்ன பிரமாதம்! எத்தனை முறை வேண்டுமானாலும் தீச்சாறு பிழிந்தெடுக்க முடியும், இந்தத் துதிக்கையிலிருந்து! இதோ பாருங்கள்!

[என்று மீண்டும் விநாயகரின் அருகே செல்கிறார் அவரைத் தடுத்து...]


பூ-160-இ-4