பக்கம்:இன்ப வாழ்வு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ உடைந்ததே!

விறல் மறவன் ஒருவன் - திரள் தோளன் - திண்ணிய மார்பன் - அஞ்சா நெஞ்சன் - ஆண்மை மிக்கவன். போர்க்களத்தில் அவனைக் கண்ட அளவில், எத்தனையோ முறை பகைவரின் படையணிகள் பல உட்கி உடைந்து ஓடிவிட்டன. ஆனால் அத்தகை யோனது ஆண்மையும் ஒருமுறை உடைந்து சிதைந்து சிதறிவிட்டது. எப்போது? அவன் தன் காதலியின் கவர்ச்சியான நெற்றியழகைக் கண்டபோது அவனது வன்மை தளர்ந்து சோர்ந்துவிட்டதாம். போர்ப் படையினும் காதலின் வன்மை மிகப் பெரிது போலும்! இதனை அவனே சொல்வதாகத் திருவள்ளுவர் ஒரு குறளில் சுவையாகச் சொல்லியுள்ளார். அக்குறளினை ஈண்டு ஆய்வாம்:

‘ஒண்ணுதற்கு ஒஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு.”

இக்குறளின் பொருள் வருமாறு:

(பதவுரை) ஞாட்பினுள் = போரிலே, நண்ணாரும் = பகைவரும், உட்கும் - நாணி அஞ்சக்கூடிய, என்பீடு = எனது பெரிய வல்லமை, ஒண் நுதற்கு = (இந்தப் பெண்ணின் அழகிய நெற்றிக்கு (அதாவது, நெற்றியைக் கண்டதும்) ஒஒ - ஐயையையோ, உடைந்ததே - உடைந்து ஒழிந்து விட்டதே, என் செய்வேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/139&oldid=550710" இலிருந்து மீள்விக்கப்பட்டது