பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

17


இரண்டையும் விட்டாரிலர்; இதையும் ஒரு கை பார்க்கின்றனர்-அதையும் ஒரு கை பார்க்கின்றனர். மக்களுள் மரவகை உணவு மட்டும் உண்பவர் மிகவும் குறைவானவரே.

ஒருவர் இன்னொருவரை நோக்கி, தழைகளையும் இலைகளையும் தின்பதற்கு நாம் என்ன ஆடா-மாடா? என்று கேட்டார். அதற்கு மற்றவர், ஆடுமாடுகளைக் கொன்று தின்பதற்கு நாம் என்ன சிங்கம் புலி கரடியா? - என்று வினா எதிர் வினா விடை விடுத்தார். மாந்தர் மாந்தரையே கொன்று தின்னும் காலம் இருந்தது - இடங்கள் இருந்தன. இப்போது இது இல்லை. நாம் அறியாத காடு - மலைப் பகுதிகளில் தீவுகளில் எங்கேனும் இந்த நிலைமை இப்போதும் இருக்குமோ என்னவோ!

தனியொரு மாந்தர் பிறர் உதவியின்றி உலகில் வாழ முடியாது. ஒருவர்க்குக் குறைந்தது குடும்பத்தின் உதவியாவது தேவை. ஒரு குடும்பத்திற்கு ஊரின் உதவி தேவை. ஓர் ஊருக்கு நாட்டின் உதவி தேவை. ஒரு நாட்டிற்கு உலகத்தின் உதவி தேவை. எனவே, குடும்ப ஒருமைப்பாடு - ஊர் ஒருமைப்பாடு - நாட்டு ஒருமைப்பாடு - உலக ஒருமைப்பாடு என்பன முறையே தேவையாகும்.

இந்த அடிப்படையில், தன்னுயிர் போலவே மன்னுயிரையும் காத்து உலகத்தோடு ஒன்றி வாழ்தல் உயிர் அன்பு(ஆன்மநேயம்) எனப்படுகிறது. தமக்குத் துன்பம் நேரின் தாம் வருந்துவது போலவே, பிற உயிர்களும் துன்பம் நேரின் வருந்தும் என்பதைத் தம் சொந்தப் பட்டறிவால் உணர்ந்து, பிற உயிர்களின் நன்மையிலும் கருத்து செலுத்தல் வேண்டும். பிற உயிர்களின் துன்பத்தைத் தமக்கு வந்த துன்பம் போல் எண்ணி, அவ்வுயிர்கட்கு வேண்டிய நலம் செய்யாவிடின், ஆறறிவு பெற்றிருப்பதால் - கல்வி கேள்வி