பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சுந்தர சண்முகனார்


மிடுக்காக நடந்து கொண்டிருந்தது. அத்தகைய போராட்டம் புதுச்சேரியில் நடக்காதபடிப் பிரெஞ்சுக்கார ஆட்சியினர் கண்காணித்து வந்தனர். குறிப்பாக, அரசு ஊழியர்கள் கதர் உடையும் காந்தி குல்லாவும் அணியக்கூடாது என்பது கடுமையான ஆணையாகும்.

ஆனால், பிரெஞ்சு அரசுக் கல்வித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த நம் கவிஞர் கதராடையும் காந்தி குல்லாவும் அணிவாராம். பிரெஞ்சுக்காரக் கல்வித்துறைத் தலைவர் விடுமுறையான ஒருநாளில் தமது வீட்டில் ஆசிரியர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தாராம். குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கூட்டத்திற்கு வர வேண்டுமாம்.

அவ்வாறே ஆசிரியர்கள், குறித்த நாளில் துறைத் தலைவரின் வீட்டில் சென்று அமர்ந்திருந்தனராம். அப்போது, கவிஞர் கதராடையும் காந்தி குல்லாவும் அணிந்து கொண்டு போய் ஆசிரியர்களுடன் அமர்ந்தாராம். ஆசிரியர்கள் சுப்புரத்தினம் என்னும் இயற்பெயருடைய கவிஞரைப் பார்த்து, ‘டேய் சுப்புரத்தினம்! இந்த உடையுடன் இங்கே இருக்காதே - போய் வேறு உடை உடுத்திக்கொண்டு வா அல்லது வீட்டுக்குப் போய்விடு. துரை (கல்வித்துறைத் தலைவர்) வந்து பார்த்தால் உன்னைத் தொலைத்து விடுவான். உன் வேலைக்கே சீட்டுக் கிழித்துவிடுவான் - எழுந்து போ போ - என்று வற்புறுத்தினார்களாம்.

ஆனால் கவிஞர் சிறிதும் அசைந்து கொடுக்க வில்லையாம்; துரை வந்து பார்க்கட்டும். எனக்குச் சீட்டுக் கிழிக்கட்டும் - நான் எதற்கும் தயார் என்று கூறினாராம். மீண்டும் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டும் கவிஞர் நகராமல் ஒரே உறுதியுடன் இருந்து விட்டாராம்.