பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சுந்தர சண்முகனார்


இசைத் தமிழ், கூத்துத் தமிழ் (நாடகத் தமிழ்) என்பனவாகும்.

மக்கள் தொடக்கக் காலத்தில் வாயில் வந்தபடி இசைத்துப் பாடியிருப்பார்கள், இப்போதும் அறியாத தொழிலாளர்கள் பாடிக்கொண்டே தொழில் செய்வதைக் காணலாம். எனவே, இசைத் தமிழ்தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும்.

கண்டபடிப் பாடிக்கொண்டிருந்த மக்களுள், மகிழ்ச்சி மேலீட்டால் பலர் சேர்ந்து பாடியபடியே ஆடியிருப்பர். நாளடைவில் ஆடல் பாடலோடு பல கருத்துகள் கூறி நடித்தும் இருப்பர். இதுதான் கூத்துத் தமிழ் (நாடகத் தமிழ்) ஆகும். இசைத் தமிழ் முதலாவ தென்றால், கூத்துத் தமிழை இரண்டாவதாகக் கூறலாம்.

நாடைவில் வாழ்க்கை முறைகளையும் பல அறிவுரைகளையும் அமைத்துப் பாட்டு எழுதலாயினர். இலக்கியம் எனப்படும் இதுதான் இயல்தமிழ் ஆகும். பின்னர், இயல் தமிழை எவ்வாறு எழுதல் வேண்டும் என இலக்கணம் வகுத்தனர். இலக்கணமும் இயல் தமிழைச் சேர்ந்ததுதான். இந்த இயல் தமிழை மூன்றாவதாகக் கொள்ளலாம். ஆகவே, பல கருத்துகள் அமைந்த பாடல்களைப் பாடி ஆடுவதில் முத்தமிழ்க் கூறும் இருப்பதை அறியலாம்.

இயல் தமிழ் மூன்றாம் இடத்தைப் பெறினும், இசைத் தமிழிலும் கூத்துத் தமிழிலும் பல கருத்துகள் பொதிந்து கிடப்பதால், இசைத் தமிழிலும் கூத்துத் தமிழிலும் இயல் தமிழும் உள்ளது-அதாவது-இயல் தமிழ் இல்லாத இசைத் தமிழோ கூத்துத் தமிழோ இல்லை எனலாம்.

பண்டைக் காலத்தில் என்றென்ன! இக்காலத்தும் இலக்கிய விரிவுரையாற்றும் சிலர், பக்க இசை இயங்