பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

93




திருச்சி ஜங்ஷன்
17.4.46

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

15.4.46 அன்று கல்கியும் நானும் குற்றாலத்திலிருந்து புறப்பட்டு எட்டயபுரம் வந்தோம். தோசையோடுந்தான் வந்தோம். அமிர்தசாமி அவர்கள் எங்களுக்கு ஒரு வரவேற்பும் ஏற்படுத்தவில்லை. ஆனால் தோசைக்காக வேண்டிய மட்டும் ஏற்படுத்திவிட்டார்கள். தோசை, காரை விட்டு இறங்கியதும் அவர்களும் சில நண்பர்களும் இலையைப் போட்டுக்கொண்டு வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள். சாப்பிட்டார்கள். ஏதோ பாட்டுக் கச்சேரியைத் தலையசைத்தும், பலே போட்டும் அனுபவித்துக் கொண்டிருந்ததாகத்தான் தோன்றும் துரத்திலிருந்து பார்த்தவர்களுக்கு.

தோசை வருகிற விஷயத்தை அரண்மனையிலும் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தார்கள். மகாராஜா ராணி இளவரசுகள் எல்லாரும் ராச்சாப்பாட்டுக்கு தோசையையே உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.

இவ்வளவு மிருதுவாகவும் ருசியாகவும் இருப்பதற்கு ஏதேனும் தனியான முறை உண்டோ என்று மகாராஜா கேட்டார்கள். இல்லை என்றேன். அரிசியும் உளுந்தும் நல்ல தினுசாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். மற்ற குறிப்புகளைத் தங்கள் புத்தகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டுமே என்று விட்டுவிட்டேன்.

தோசை விரிந்துகொண்டே போகிறது தங்களால், எங்கே போய் நிற்கப் போகிறதோ தெரியவில்லை.

பாரதி மண்டபம் முக்கால்வாசி ஆகிவிட்டது. சீக்கிரம் பூர்த்தியாய்விடும். ஜூன் மாதம் 30 ஆம் தேதி கச்சேரி ஆரம்பித்தால் நல்ல முகூர்த்தமாகவே இருக்கும்.