பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல் முகம்

காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்லவினைகள் செய்துன்

கோலை மனமெனும் காட்டின் கிறுத்தல் குறியெனக்கே.[1]
-பாரதியார்

"பறக்கச் சிறகிருந்தால் வெண்ணிலாவே-உன்றன்

பக்கம் வந்து சேருவேனே வெண்ணிலாவே...”[2]

என்பது புதுமைகளைக் கண்டு களிப்பெய்தத் துடிக்கும் மனிதன் காணும் கனவுகளைக் காட்டும் கவிஞனின் குரல். கவிஞர்களைப் போலவே அறிஞர்களும் கற்பனை ஓவியங்களைத் தீட்டிச் சுவை மிக்க புதினங்கள் பலவற்றைப் படைத்து மகிழ்கின்றனர். நம்மையும் மகிழ்விக்கின்றனர். இங்ஙனம் கி. பி. 160இல் எழுதப்பெற்ற கதையொன்றில் கதைத்தலைவன் வானக் கப்பலில் செல்லுகின்றான் பல இடையூறுகளைத் தாண்டி, விபத்துமிக்க பகுதிகள் பலவற்றைக் கடந்து, எட்டு நாட்கள் கழித்து விண்வெளியில் ஒளிமிக்க தீவு ஒன்றினைக் கண்ணுறுகின்றான். இதுவே மதிமண்டலமாகும். இன்னெரு கதையில் கதையாசிரியர் கதைத் தலைவனுக்குச் சிறகுகளைப் படைத்துவிடுகின்றார். மதிமண்டலத்தை எட்டிய இவன் கதிரவன் மண்டலத்தையும் அடைய முயல்கின்றான். இதனைக் கண்ட வானுலகத்தோர் சீற்றங்கொண்டு அவனைத் தரைக்கு அனுப்பிவிடுகின்றனர். மீண்டும் அவன் விண்வெளிக்கு வர இயலாதிருக்க அவனது இறக்கைகளையும் களைந்து விடுகின்றனர்!’ இதற்குப் பல நூற்றாண்டுகட்குப் பிறகு (17 ஆவது நூற்றாண்டில்) கெப்ளர் எழுதிய கதையிலும், அவருக்குப் பின்னர் காட்வின் என்பாரும், பிறரும் எழுதிய நூல்களிலும் மதிமண்டலச் செலவு பற்றிய கருத்துக்கள் வருகின்றன. கெப்ளர் காலத்தில் சமயக் கோட்பாடுகட்கும் அரசியல் கொள்கைகட்கும் புறம்பான கருத்துக்களை எடுத்துரைப்பவர்கள் கடுந்தண்டனைக்குள்ளானதால் அவர்


  1. கவிதைகள் : விநாயகர் நான்மணிமாலை - செய்-6.
  2. கவிமணி: மலரும் மாலையும். வெண்ணிலா-15.