188 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் புகழ், மறுமை இன்பத்தையும் அளிக்கவல்லது. வீரத்தைப்போல் முற்றிலும் மனத்தின் திரிபாகவே அமையாமல், புகழ் அறிவையும் பற்றுக்கோடாகக் கொண்டு, செயற்கரிய செய்தலை மேற்கொண்டு அதைச் செய்வதால் ஈட்டப்படுவதனாலேயே வீரத் தினும் பெரும்பயனுடையதாய் இருக்கிறது. இராவணன் வீரவுணர்ச்சியை மங்கச் செய்ததால் இம்மை இன்பத்தை இழந்ததோடு, இதுவரை ஈட்டிய புகழை இழந்ததால் மறுமை இன்பத்தையும் தொலைத்துவிட்டான். இவ்விரண்டையும் அவன் இழக்க நேர்ந்தது, உடலின்பமாகிய ஒருவகை இம்மை இன்பத்தை விரும்பியே, வீரத்தையும் புகழையும் இழந்ததோடு அவன் எத்துறையை விரும்பி இவற்றை இழந்தானோ, அத்துறையிலும் வெற்றி பெறாமல் கலங்குவதே அவலச் சுவையைப் பயக்கின்றது. வீரம், புகழ் இவைகளை மட்டுமா இழந்தான் இராவணன்? மானம், குலம் என்ற இரண்டையுங் கூட இழந்து விட்டான். குடிப்பிறப்புக்கு ஒவ்வாதவற்றைச் செய்ததோடு, பிறர் பழிப்பதை நேரில் உணர்ந்தும், அவற்றைத் தொடர்ந்து செய்வதில் ஊக்கங்காட்டியது, அவன் இவை இரண்டையுங் கூட இழந்துவிட்டான் என்பதை உணர்த்துகின்றது. இவையனைத்தையும் இழந்த பின்னும், இராவணன் முற்றிலும் இழந்து விட்டான், என்று சொல்வதற்கில்லை. ஏனெனில், அவன் இதுவரை பாடுபட்டுத் தேடிச் சேர்ந்தவற்றை மட்டிலுமே இழந்துவிட்டிருக்கிறான். 'முக்கோடி வாணாளும் முயன்றுடைய பெருந்தவமும்' உடையவன், இனித் தன் போக்கை மாற்றிக் கொண்டாலும் இழந்தவற்றை மீண்டும் அடையப் பெறுவதோடு, மேலும் புகழ் ஈட்டலாம் அன்றோ?
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/205
Appearance