பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவலம் , 37 கிறது. தீமை என்று நம்மால் கூறப்படும் பகுப்பிலும் சக்தி, வன்மை, ஆன்மபலம் என்பவை இருத்தல் கண்கூடு. இவை முறை தவறிப் பயன்படும்பொழுது தீமை என்ற பொதுப் பெயரை அடைகின்றன. ஆன்மபல அழிவுதான், சுருங்கக் கூறுமிடத்து, அவலமாகப் பரிணமிக்கிறது, ஆன்மபல அழிவின் பொழுது ஏற்படும் துன்பத்தைக் கண்டுதான் நாம் உளம் வருந்துகிறோமே தவிரச் சாதாரண துன்பத்தைக் கண்டு உளம் வருந்துவதில்லை. மனத்தில் மட்டுமே வருந்துகிறோம். உளத்திற்கும் மனத்திற்கும் வேற்றுமை உண்டென்பதை மறக்கலாகாது. ஆன்மபல அழிவின் பொருட்டுமட்டும் ஏன் வருந்துகிறோம்? காரணம், நாம் ஆன்மாவின்மேல் வைத்திருக்கும் மதிப்பே ஆகும். எனவே, நாம் எப்பொருளின்மேல் மதிப்பு (Value) வைத்திருக்கிறோமோ அப்பொருளின் அழிவுக்கே உளம் வருந்துகிறோம். வருத்தத்தின் காரணம் நாம் கொண்டுள்ள மதிப்பே தவிரப் பொருளின் இயல்பன்று. ஒரே பொருளின் அழிவு பலருக்குப் பலவிதமான அளவில் வருத்தத்தை உண்டாக்குகிற தென்பது யாவரும் அறிந்த உண்மை. ஒரு மனிதன் இறந்தான் என்றால் அதனைக் காணும் அனைவரும் ஒரே அளவு வருத்தத்தை அடைய முடியாது. அவனோடு நெருங்கிய தொடர்புடையார் மிகுதியும் வருந்துவர். ஏனையோர் அவரவர்கள் இறந்தவனோடு கொண்டுள்ள தொடர்பிற்கேற்ப வருந்துவர். காரணம் என்ன? நெருங்கிய தொடர்புடையராய் அவன் குடும்பத்தார் அவன் மாட்டுக் கொண்டுள்ள மதிப்பே அவர்களுடைய வருத்தத்திற்குக் காரணமாகும். பொருள் ஒன்றேயாயினும் காண்பாரின் தொடர்பை நோக்கி அதன் மதிப்பு உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்