பக்கம்:இராவண காவியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று முன்னூல் கூறுகிறது-அசுரன் அவன் என்று பயங் கட்டுகிறது. இராவண காவியத்திலே, சம்பரன், அசுரனல்ல-பாண்டியன்! எதைக்கொண்டு இம் முடிவு கட்டுகிறார்? முன்நூலிலே சம்பராசுரன், மீனக்கொடியோன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது; ஆக, மீனக்கொடி பாண்டியனுக்குரியது! எனவே சம்பரன் அசுரனென்று ஆரியரால் நிந்திக்கப்பட்ட பாண்டிய மன்னனாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு கட்டுகிறது. இஃதே போலவே, இந்நூலின் கண் காணப்படும் பல்வேறு நிகழ்ச்சிகட்கும் ஆதாரம், இராமாயணத்திலிருந்தே சலித்து எடுக்கப்பட்டவையே யாகும்.

இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும், ஆரியர்க்கும் ஆரிய நேசர்கட்கும், ஒரே ஒரு வழிதான் உண்டு; இராமாயணமே பொய்க்கதை, அதனை நாங்கள் ஏற்கோம் என்று அறிவித்துவிடுவது தான். வேறு மார்க்கம் இல்லை.

கதை கிடக்கட்டுமய்யா! காவிய ரசனை இருக்கிறதே, அது, கம்பனின் இராமாயணத்தில் பொங்கி வழிகிறதே, அதிருக்கட்டும் அச்சம் ஏன்? கொச்சைத் தமிழிலே, ஏதேதோ கூறிடுவோர் கூறட்டும். அழகு கவிதையில் ஆரிய இராமன் மிளிர்கிறான், என்று கூறுவதற்கும் இந்தப் பொல்லாத குழந்தை இடந்தரவில்லை! கூறவேண்டியதைக் காவியச் சுவை குறைவுபடா வண்ணம் கூறி விட்டிருக்கிறார். அங்கு ஆறு ஓடும் விதம் எவ்வளவு அழகு பட உளதோ, இங்கு முளது. அங்கு இயற்கைக்குத் தமிழ் ஆபரணம் பூட்டப்பட்டிருப்பது போலவே, இராவணகாவியத்திலும் பொலிவுறப் பூட்டப்பட்டுளது. அதிலாவது, தேவாம்சம் புகுந்து தமிழின் இனிமைக்கும் ஊறு தேடுகிறது; இதன் கண் அக்குறையும் கிடையாது. அது ஆரியங்கலந்த கடுந்தமிழில் புலவர்க்காக ஆக்கப்பட்டது. இது எளிய இனிய தனித்தமிழில் எல்லாத் தமிழ்மக்களுக்கும் இயற்றப்பட்டது. எடுத்துக்காட்டாகச் சில கூறுவோம்.

1. கதிரவன் தோற்றம்

“அளித்தகை யில்லா வாற்ற லமைந்தவன் கொடுமை யஞ்சி
வெளிப்பட வரிதென் றுன்னி வேதனை யுழுக்கும் வேலை,
களித்தவர் களிப்பு நீங்கக் காப்பவர் தம்மைக் கண்ணுற்
றொளித்தவர் வெளிப்பட்ட டன்னக் கதிரவ னுதயஞ் செய்தான்,”

[கம்பராமாயணம்: அணிவகுப்புப் படலம், 24]
[சூரியன், இராவணன் கொடுமைக்கு அஞ்சி வெளிவர முடியாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/17&oldid=1536874" இலிருந்து மீள்விக்கப்பட்டது