பக்கம்:இராவண காவியம்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


________________

ருக்குத் தீட்டிய திருமுகத்திலேயும் இதனைக் குறித்தார். நோக்கமே அந்நூலுக்கு அது தான்.

 தோழர் புலவர் குழந்தை, தமிழர் - தமிழ்இனம் விழிப்புற்று வீறு கொண்டு, விடுதலை பெற்று; வீரமக்களாய், தன்னாட்சித் தனியரசுரிமையுடன் வாழவேண்டும் என்ற நோக்குடையார். எனவே, அவர் தமது அறிவுத்திறனை, ஆராய்ச்சி அனுபவத்தை, தமிழை, இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். காவியத்திலே, தமிழ்நாடு, தமிழ், தமிழர் தன்மை , ஆரியர் வருகை, அவரைத் தமிழர் ஆதரித்தமை, ஆசியரின் உட்கருத்து. அவர் தம் உளவு முறை, கெடு நினைப்பு, தீய செயல் ஆகியவற்றினை விரித்துரைத்திருக்கிறார்.
 சுருங்கக் கூறுமிடத்து, இந்நூல், பழமைக்குப் பயணச் சீட்டு, புதுமைக்கு நுழைவுச் சீட்டு, தன்மான இயக்கத்தார், தமிழ்ப்பகைவர்கள், காவியமறியாதார், கலையுணர்வில்லாதார் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம். தமிழ் மறுமலர்ச்சியின் தலை சிறந்த நறுமலர். நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும், இனப்பற்றும் ஒருங்கமைந்த ஓவியம். தமிழரின் புதுவாழ்வுக்கான போர் முரசு! காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம். எனவே இது அழிந்துபடாது என்று இறுமாந்திருப்போருக்கு ஓர் அறை கூவல். தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு! தமிழரசுக்குக் கால்கோள்! விடுதலைக் கீதம்!
 இவ்வரிய நூலை, மிகச் சிரமப்பட்டு, தமிழரின் தன்மானம் தழைக்க வேண்டும் என்ற நோக்குடன் எழுதியுள்ளமைக்கு, என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுடன்; நந்தமிழ் மக்கள் இதற்குப் பேராதரவு தருவர் என்று அவர்க்கு உறுதி கூறுகிறேன். தமிழராகிய நீவிர், உமக்கென ஆக்கப்பட்ட இத்தனித் தமிழ்க் காவியத்தைப் போற்றியாதரிப்பீர் என்ற நம்பிக்கையை ஈடேற்றி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.
          அன்பன், 
        அண்ணாத்துரை,