பக்கம்:இருட்டு ராஜா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்103

 திரிபுரம் முத்துமாலையின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள். அழுதாள்.

அவனுக்கு மிகுந்த சங்கடமாகி விட்டது. அவளுக்காக இரக்கப்பட்டான். என்ன செய்வது? இவனை என்ன செய்வது? திகைத்துத் தடுமாறினான்.

சில பெரியவர்கள் மனமிரங்கினார்கள். போகுது, குத்தம் பெரிசுதான். இருந்தாலும், அவங்க முயற்சியிலே வெற்றி பெற விடாம நீங்க தடுத்திட்டீங்க, அது ரொம்பப் பெரிய விஷயம் இந்த பொண்ணு அழுறதைப் பாக்கையிலே மனசுககுக் கஷ்டமாத்தான் இருக்கு. அவளுக்காகவும் இந்தச் சின்னப்புள்ளைகளுக்காகவும் அவனை மன்னிச்சுடுவோம். போலீசிலே ஒப்படைக்கவேண்டாம், கோயில் திருப்பணிச் செலவுக்காக இவங்க ஐநூறு ரூபா கொடுத்துடனும், மாடசாமி இனி இந்த ஊரிலே இருக்கப்படாது.அந்த ஆளுக கூட வேணும்னாலும் போகட்டும் என்று தீர்ப்பாகச் சொன்னார்கள். “என்ன முத்துமாலை நீ என்ன சொல்றே?” என்று கேட்டார்கள்.

“உங்கள் விருப்பம்” என்றான் அவன்.

அவ்வாறே செயல்படுத்தப் பட்டது. நாறும்பூநாதன் கோட்டு பையிலிருந்த பர்ஸை எடுத்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை உருவி அவர்களிடம் கொடுத்து விட்டான்,

தலை குனிந்தவனாய் காரை நோக்கிப் போனான். காரின் டயர்களில் காற்று இல்லை என்பதை அறிந்ததும், சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான்.

பிறகு, அவனும் அவன் கூட்டாளியும் சேர்ந்து ஒவ்வொரு டயருக்கும் காற்றடித்ததையும், மவுனமாகக் காரில் ஏறி உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பியதையும் எல்லா ஜனங்களும் வேடிக்கையாகப் பார்த்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/105&oldid=1139569" இலிருந்து மீள்விக்கப்பட்டது