பக்கம்:இருட்டு ராஜா.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வல்லிக்கண்ணன்133
 


ஆத்திரமாக சுடுசொற்களை வீசி எறிந்து விட்டு, திரும்பிப் பாராமலே நடந்தான் முத்துமாலை. “இவங்களுக்கு இது போதாது. இன்னும் சூடாக் கொடுக்கணும். இது அவங்க ஊரும் இல்லே. நம்ம ஊரும் இல்லை. வந்த இடத்திலே வீண் வம்பு என்னத்துக்குன்னு இவ்வளவோடு நிறுத்தி விட்டேன்” என்று ராமதுரையிடம் கூறினான்.

முத்துமாலையின் போக்கு அந்த இளைஞனை பிரமிக்க வைத்தது. அவனுடைய எண்ணங்களும் செயல்களும் வியப்பளிக்கும் விஷயங்களாகவே பட்டன.

ராமதுரை சொன்னான்:

“அண்ணாச்சி, நீங்க செய்த தீர்ப்பு தான் சரியானது, நல்லதுன்னும் எனக்குப் படுது”

“எதைச் சொல்லுதே?” என்று புரியாதவனாய் விசாரித்தான் முத்துமாலை.

“நீலா விவகாரம்தான். யோசிக்கையிலே வேறு எந்த முடிவும் அவளுக்கு நன்மை செய்யாதுன்னுதான் தோணுது. வளர்மதி கதியை நினைச்சுப் பார்க்கையிலே நம்ம சாதி சனம் வசதியான இடம்னு தேடிப் பார்த்துப் பேசி முடிச்சு சிறப்பாச் செய்து விடுகிற கல்யாணமும் சம்பந்தப்பட்ட பொண்ணுக்கு குறைவற்ற வாழ்க்கையையும் குணம் நிறைந்த கணவனையும் கொண்டு தரும் என்று நிச்சயமா நம்பறதுக்கில்லேன்னு தெரியவருது. இப்படியெல்லாம் செய்து பெரியவர்களாப் பார்த்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கறதைவிட பெண்ணே தன் மனசுப்படி தேடித் தேர்ந்து கொள்கிற துணைவனும் அமைத்துக் கொள்கிற வாழ்க்கையும் மேலானதுன்னு படுது. அது அவளுக்கு சந்தோஷத்தையும் நல்ல எதிர்காலத்தையும் கொண்டு சேர்க்கும்னும் எதிர்பார்க்கலாம் இல்லையா?”