பக்கம்:இருட்டு ராஜா.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55இருட்டு ராஜா
 

 “உங்களைத் தவிர வேறு யாரும் இறங்கலே, நீங்க பேர்றபடி உங்க பின்னாடியே வரலாம்னு நினைச்சு வந்தேன். நீங்க வேகமா நடந்ததனாலே நான் ஒடி வர வேண்டியதாச்சு” என்றாள்.

“உன் பேரு தனபாக்கியமா?” என்று கேட்டான்.

“ஊம்” என்றாள் அவள்.

“ஊருக்குப் போய் சேர்ந்ததும் என்ன செய்யலாம் என்று எண்ணினே?”

“நான் ஒண்ணுமே எண்ணிப்பார்க்கலே, அந்தக் கிழக்குரங்கு கிட்டேயிருந்து தப்பிக்கனுமே, எப்படிடா தப்பிக்கலாம் என்கிற ஒரே நெனப்பிலேயே இருந்த தனாலே, வேறு எதைப் பத்தியும் யோசிக்க நேரமில்லே, மனசும் ஒடலே.”

அவர்கள் நின்று நின்றும், மெதுவாக நடந்தும் பேசியவாறே முன்னேறினார்கள்.

“ராத்திரிப் பொழுது கழிஞ்சிட்டா, விடிஞ்சப்புறம் ஏதாவது வழி தேடிக் கொள்ளலாம். இந்த ஊரிலேயே இருந்து விட்டு வேலைகள் செய்யலாம். வேலைக்காரி தேவைப்படும் வீடுக இல்லாமலா போகும்? இந்த ஊரிலே இல்லேன்னு போயிட்டா பக்கத்து ஊர்களிலே முயற்சி பண்ணலாம். கையும் காலும் திடமா இருக்கையிலே , உழைக்கவும் தயாராக இருக்கையிலே. பிழைப்பு நடத்த முடியாமலா போயிடும்?” என்று அவள் தன்னம்பிக்கை யோடு பேசினாள்.

அவளுடைய மன உறுதி முத்துமாலைக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு இருபது இருபத்திரண்டு வயது இருக்கும் என்று நினைத்தான்.

“உனக்கு வயசு என்ன ஆகுது?”