பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பானால்

53

றேசிவிட்டு, உள்ளே நுழைந்து, கிடந்ததை எடுத்து வீசி, நொறுக்கித் தூள் தூளாக்கி, அரண்மனையை அல்லோலகவ்லோாலப் படுத்திடும் அளவுக்கு மாறிவிட்டார்கள்!

அந்த அளவு மாறிவிட்ட பெண்கள், அரசனும் அரசியும், முன்பு அடங்கிக் கிடந்த மக்களால், அடக்கப்பட்ட நிலையில் ‘ஊர்வலம்’ வரக்கண்டால், ஏசாமலா இருப்பர்! கண்டபடி ஏசத்தான் செய்வர். வெற்றிக் களிப்புடன் கூச்சலிட்டனர்.

சீற்றம்! கேலி! மகிழ்ச்சி! — எல்லாம் கலந்த இரைச்சல்!

யாராருக்கு என்னென்ன தோன்றுகிறதோ, அவை எல்லாம் பேசுகிறார்கள்! பேசுகிறார்களா? கூவுகிறார்கள்! வார்த்தைகள் மட்டுத்தானா, கிளம்பின! பார்வைகள், வார்த்தைகளைவிடக் கடுமையாக, வேகமாக! தேக்கிவைக்கப்பட்டிருந்த பெருவெள்ளம், அணையைப் பல இடங்களிலே, ஒரே நேரத்தில், பிளந்துவிட்டால், என்ன ஆகும்! அதுதான் இது! மன்னனை ஊர்வலமாக, மக்கள் அழைத்து வந்த காட்சி/ அழைத்து வந்த' என்பதை நீக்கிவிடுங்கள். ‘இழுத்து வந்த’ என்று கொள்ளுங்கள்!

அரசனுடைய காவற்படை கூட வருகிறது! அரசனைக் காத்திடும் ஆற்றலுடன் அல்ல, தமது தலை தப்பினால் போதும் என்ற அச்சத்துடன். மக்களின் பாதுகாப்புப்படை, எண்ணிக்கையில், வலுவில், துணிவில், அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. அந்தப் படை, ஏது? மக்கள், பன்னெடு நாட்கள் சிந்திய கண்ணீர்த்துளிகள், அந்த வடிவம் கொண்டுவிட்டன! கொடுமைகளைத் தாங்கித் தாங்கித் தவித்து மக்கள் ஈன்றெடுத்த பயங்கரக் குழவி, அந்தப் படை!

போர்ப் பயிற்சியை முறைப்படி பெறவில்லை! உண்மை. ஆனால் முறைப்படி போர்ப் பயிற்சிபெற்ற படைகளையும் சின்னாபின்னமாக்கும் துணிவு இருக்கிறது, இந்த மக்கட் படைக்கு! ஏன்? இது, சாக அஞ்சாத கூட்டம்!