பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

இதயம்

‘கற்பழிக்கப்பட்ட தங்கையின் பிணத்தருகே அமர்ந்து, காதகன் கணவனாக இருக்கிறானே, நான் என்ன செய்ய இயலும்’ என்று கதறிய அண்ணன் இருக்கிறான் அந்தப் படையில்!

“சாகக்கிடக்கிறாளய்யா, என் தாய்! இந்தப் பழக்கொத்து அவளுக்காக, ஐயா!”—என்று கெஞ்சியபோது, இடியெனச் சிரிப்பொலி கிளப்பி, பழக் கொத்தைப் பறித்துக் கீழே வீசி, தன் குதிரையின் குளம்பு, பழக்கொத்தை மிதித்து துவைத்திடக்கண்டு, “இதுதான் உனக்கு! ஓடி, உயிர்பிழைத்துக் கொள்” என்று, ஆர்ப்பரித்து அமுல் செய்தவனை எதிர்த்து நின்று, அவன் வாளுக்கு இரையான, அண்ணனைக் கட்டிப் புரண்டு அழுத, தம்பி இருக்கிறான்!

வீடு வாசல் இழந்தவர்கள், வேலை இழந்து தவித்தவர்கள், களஞ்சியம் கொளுத்தப் பட்டதைக் கண்டு பதைத்தவர்கள், காலில் வீழ்ந்த போதும் கடுகளவு இரக்கமும் காட்டாதவர்களின் போக்கினால், நொந்தவர்கள் இருக்கிறார்கள், அந்தப் படையில். அவர்களுக்குப் பயிற்சி ஏன்? பயிற்சி இல்லை என்றுதான் எப்படிக் கூறிட முடியும்? நிரம்பப் பெற்றுவிட்டார்கள் பயிற்சி! கொடுமைகளைக் கண்டு கண்டு, கொடுமையைக் கொன்றொழித்தாலன்றி, நாம் வாழ முடியாது என்பதைக் கண்டு கொண்டார்கள்! இரத்தக் கறையைப் போச்க இரத்தம் கொண்டுதான் கழுவவேண்டும் என்ற பாடம் தெரிந்து கொண்டார்கள்! இரத்தம் தேடி அலைகிறார்கள்! உழைக்காமல் அலுத்திடாமல் ஊர் சொத்தை உண்டுகொழுத்து, உல்லாசம் தேடி அலைந்து, முத்துக் கலந்த பானமும், மோகனாங்கியின் அதரமும் ஒரு சேரச்சுவைத்து, அனுபவித்தவர்களின் இரத்தம் தேடி அலைகிறது. இந்தப்படை! உழைப்பாளியின் இரத்தம், மண்ணில் உறைந்து கிடந்ததைப் பார்த்த கண்களால், உலுத்தர்களின் இரத்தம் எப்படி இருக்கிறது என்று பார்க்கத் துடிக்கிறது. இந்தப் படை! ஓநாய்களைத் துரத்திக் கொண்டு வரும் வேட்டைக்காரர்கள் என்று சொல்வது முறை! இல்லை, இல்லை! வேட்