பக்கம்:இலக்கண வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

பகுத்துரைப்பதும் (சொ. 17) முதலியவை நன்னூலார் முதலிய பின்னூலோர்க்கு உதவிய உரைவளங்களாம்.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்னும் நூற்பாவுக்கு (சொ. 152) “பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும் பொருள் குறியாது நில்லா” என உரை கூறுகின்றார். ‘பொருள் குறித்து நிற்கும்’ என்னாமல், பொருள் குறியாது நில்லா என்று ஈரெதிர் மறைகளால் உடன் பாட்டுக் கருத்தை வலியுறுத்துவது, “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; அவ்வாறு குறியாதது சொல்லன்று” என்பதை உறுதிப்படக் கூறுவதற்கேயாம்.

முக்காலங்களையும் சுட்டும் இளம்பூரணர், “இறப்பாவது தொழிலது கழிவு; நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை; எதிராவது தொழில் பிறவாமை” என்கிறார். எளிமையும் அருமையும் மிக்க குறிப்புகள் இவை.

கைக்கிளை ‘சிறுமை உறவு’ என்று கூறவேண்டுமெனக் கருதுகிறார் உரையாசிரியர். அதனை, “கை என்பது சிறுமை பற்றி வரும்; அது தத்தம் குறிப்பிற் பொருள் செய்வதோர் இடைச்சொல்; கிளை என்பது உறவு; பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்றவாறு, கைக்குடை, கையேடு, கைவாள், கைஒலியல், கைவாய்க்கால் எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாகலின்” என விளக்கியமைகிறார். (பொ. 1) கை சிறுமைப் பொருட்டாதலை நிறுவுதற்கு நடைமுறைச் சான்றுகள் பலவற்றை அடுக்குகிறாரே! பொருள் விளக்கம் செய்தலில் அவர்க்கிருந்த பற்றுதலின் விளைவு தானே இது!

பிரிவு என்னும் உரிப்பொருளைக் கூறும் தொல்காப்பியர், ‘கொண்டு தலைக் கழிதலும், பிரிந்தவண் இரங்கலும்’ என இரண்டாகப் பகுத்துக் கூறுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/128&oldid=1471488" இலிருந்து மீள்விக்கப்பட்டது