பக்கம்:இலக்கண வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எ. பழைய உரை

தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவர் பழைய உரையாசிரியர் என்பார். தொல்காப்பிய உரை வரைந்த அவர் பெயரை, அறிய முடியாமையாலும் அவ்வுரையின் பழைமையாலும் அதற்கு இடப்பட்ட பெயரே பழைய உரை என்பது.

உரையாசிரியர், பேராசிரியர் என்பார் பெயர்கள், ஏட்டிலே மட்டுமன்றி அவர்களைச் சுட்டும் பின்னை உரையாசிரியர்களாலும் அறியப்படுகின்றன. இப்பழைய உரையாசிரியர் பெயரோ ஏடு தொகுப்பாளர், பதிப்பாளர் ஆயோரால் வழங்கப்பட்ட பெயராகும். இவ்வாறே புறநானூற்றுக்கும் ‘பழைய உரையாசிரியர்’ என ஒருவர் பெயரைக் குறிக்க நேர்ந்ததும், சிலப்பதிகாரத்திற்கு ‘அரும்பத உரையாசிரியர்’ என ஒருவர் பெயரைக் குறிக்க நேர்ந்ததும் எண்ணத்தக்கன.

இப்பழைய உரை சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம்; வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல் என்னும் மூன்றியல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது; இறுதியியலின் இறுதி இரண்டு நூற்பாக்களுக்கு உரை கிடைத்திலது.

காலம்

வேற்றுமையியல் இறுதி நூற்பாவில், “சேனாவரையர் கருத்தும் உரையாசிரியர் கருத்தும் இருதிறத்தனவாக மேலே கூறுமாறு காண்க” என்று பெயர்கள் சுட்டுவதாலும், வேறு பல இடங்களில் உரையாசிரியர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் தெய்வச்சிலையார் உரைகளை ஏற்றுப் போற்றுவதும், மிக அருகலாக மறுப்பதும் மேற்கொள்வதாலும் அவ்வுரையாசிரியர்களுக்குக் காலத்தால் பிற்பட்டவர் இவர் என்பது தெளிவாகின்றது. ஆகவே இவர் காலம் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனலாம்.

இ. வ-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/190&oldid=1471574" இலிருந்து மீள்விக்கப்பட்டது