பக்கம்:இலக்கண வரலாறு.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

267

வாதம்’ என்பதன் விடுபாட்டு வடிவோ என எண்ணத் தோன்றுகிறது.

பிள்ளைக்கவி என்பது பிள்ளைத் தமிழ்க்கு ஒரு பெயர். ஆனால் தனக்கென ஒன்றின்றி முன்னோர் மொழிந்த சொன்னடை பொருணடை கண்டு கவி பாடுவோனும் பிள்ளைக் கவி எனப்படுகின்றான். முன்னது நூல் வகை; பின்னது புன்பாவலன் வகை; இவ்விருவகை மயக்கு நீக்குதற்கே ‘பிள்ளைத்தமிழ்’ எனல் பெருவழக்கென அறிய முடிகின்றது (செய். 48).

ஒருவன் கவியில் வோறொரு செய்யுட் புணர்ப்போன் சார்த்துக்கவி எனப்படுகின்றான். இது கவிஞன் வகை. சாற்றுக் கவி என்பது பாவை. அரங்கேற்று விழாவின் போது பாடப்பட்ட பாராட்டுக் கவிகள் சாற்றுக்கவிகள். சாறு என்பது விழா; இவண் அரங்கேற்று விழா. பிற்காலத்தில் சாற்றுக்கவி, சார்த்துக்கவி வேறுபாடின்றி வழங்கத் தலைப்பட்டுவிட்டன (செய். 48).

பொருள் விளங்கிக் கிடந்தமையின் பொருள் விரித்துக் கொள்க. என்று கூறிச் செல்வதும் இவ்வுரையாசிரியர் வழக்கம் (செய். 40-42). பொதுவியலில் பெரும்பாலும் உரைவரையாமல் இவ்வாறு செல்கிறார். அருஞ்சொல் தம் உரைக்கண் வருமாயின் அதற்கு உரையும் வரைகின்றார். எ-டு. எடுத்தேறு சொல்-இடிபோன்ற சொல் (பொது-6); ‘வணிகர்’ என்னும் சொல் நூலில் கிடந்தும் ‘பூவைசியர்’ என் இவர் எழுதுதல் காலநிலை.

உறுப்புச் செய்யுள் இலக்கணம் நோக்கத் தக்கதாக உள்ளது. (பொது. 5). அதன் உரை: “வழக்கினோடும் மரபியலோடும் பொருத்த முடையவாய் வடவெழுத்துக் கலவாது கேட்டோர்க்கு மிகவும் இன்பம் பூரிக்கும் சொல்லாகச் சான்றோர் செய்யுட்களில் எடுத்துக்காட்டுஞ் சொற்களால் புணர்க்கப்படுவன உறுப்புச் செய்யுள்” என்பது. தனித்தமிழ் என்னும் பின்னை ஆட்சிக்கு முன்னை இலக்கணம் போன்றமைந்தது இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/312&oldid=1474235" இலிருந்து மீள்விக்கப்பட்டது