பக்கம்:இலக்கண வரலாறு.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



47. யாப்பு நூல்


இலக்கணப் புலவர், த. சரவணத் தமிழனாரால் ஆக்கப்பட்ட நூல் இது. இதுவும் நூற்பா யாப்பிலேயே அமைந்தது. தமிழன் பதிப்பக வழியே முதற்பதிப்பு 1981 இல் வெளிவந்தது. 1986 இல் இரண்டாம் பதிப்புக் கண்டது.

யாப்பு நூல் முதற்கண் உறுப்பியலும் பின்னர்ப் பாவியலுமாக இயலுகின்றது. பின்னர் வார்ப்பியல் தனியே அமைகின்றது. முன்னதில் 154 நூற்பாக்களும் பின்னதில் 39 நூற்பாக்களும் ஆக 193 நூற்பாக்கள் உள. நூலாசிரியரே உரையும் வரைந்துளார். எடுத்துக் காட்டுகள் பல திறத்தாலும் மிகப் பலவாக இடம் பெற்றுள.

“யாப்பெனப் படுவது பாட்டிலக் கணமே”

என்பது நூற்றொடக்க நூற்பா (2).

எதுகை, மோனை, இயைபு, இரட்டை, செந்தொடை என்னும் ஐந்தொடைகளையே கொள்கிறார் (34).

நாற்சீரடிக்கே , இணை பொழிப்பு என்னும் வகையில் மோனை எதுகை வகைகளைக் கூறுதல் பழமுறை. ஆனால் நாற்சீரடிக்கு மேலுள்ளவற்றையும் கூறமுயன்று மறியடி, மறியிணை, மறிபொழிப்பு, மறியொரூஉ, மிகவு என்பவற்றைப் புதிது படைத்துக் காட்டுகிறார். (47).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/485&oldid=1440403" இலிருந்து மீள்விக்கப்பட்டது