பக்கம்:இலக்கண வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


“இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன்
முறைவரை வேனென முயல்வ தொக்குமால்”

என வரும் கச்சியப்பர் அவையடக்கப் பாடலும் அறிக.

முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்

என்பது நன்னூல். மரபு எனினும் இலக்கணம் எனினும் எல்லாம் ஒரு பொருட் பன்மொழி என்னும் களவியலுரை (3) மரபு இலக்கணப் பொருளதாதலைக் குறிக்கும்.

வரலாறு :

வரலாறு என்பது வரும் வழி, வரும் முறை என்னும் பொருளது. ஆறு வருகின்ற வருகையை, “யாறு வரலாறு” என்கிறது பரிபாடல் (6:42). அதன் பழைய உரை, “இவ் யாறு, வருகின்ற வாறு” என உரை தருகின்றது.

வரலாறு ‘வரன்முறை’ என்பதுமாம். வரன்முறை என வரும் தொல்காப்பியத் தொடர்க்கு (எழுத். 137) ‘வரலாற்று முறைமை’ என்று உரை விரித்தார் உரையாசிரியர் இளம்பூரணர்.

வரலாற்று வகைகள் மிகப்பல. அவற்றுள் ஒன்று மொழி வரலாறு. மொழி வரலாற்றின் ஒரு சிறப்புக்கூறு இலக்கண வரலாறு; மற்றொரு சிறப்புக்கூறு இலக்கிய வரலாறு.

இலக்கிய வரலாறு முன்னது; விரிவுடையது; இலக்கண வரலாறு பின்னது; அவ்விலக்கிய வரலாற்றினும் அளவால் சுருங்கியது.

“இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்”

என்னும் நூற்கொள்கையே இலக்கியத்தின் முற்பாட்டையும் இலக்கணத்தின் பிற்பாட்டையும் விளக்கிவிடும். இதனை உவமையால் விளக்குதலும் நூற்கொள்கையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/51&oldid=1480835" இலிருந்து மீள்விக்கப்பட்டது