பக்கம்:இலக்கியக் கலை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 இலக்கியக் கண்ல தமிழன் வாழ்க்கை முறை இது எனக் கண்ட பின்னர், அவன் கண்போன்ற தொல்காப்பியம் இதனை எவ்வாறு குறிக்கிறது என்று கவனிக்கலாம். பொருள் என்ற சொல்லால் தமிழன் இயங்குதினை, நிலைத்திணை ஆகிய இரண்டையும், ஐம்பெரும் பூதத்தையும் குறித்தான், தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒன்பது இயல்களைக் கொண்டது. இவை வைக்கப்பட்ட முறை வைப்பும் இவற்றில் கூறப்பட்டுள்ள பொருளும் ஆராய்வதற் குரியவை. முதலாவதாக அமைந்திருப்பது அகத்திணையியல். எழுத்தும் சொல்லும் கற்றுத் தேர்ந்த ஒருவன் வாழ்க்கைக்குத் தன்னைத் தகுதியுடையவனாக ஆக்கிக்கொள்கிறான். வாழ்க்கை தொடங்கவேண்டும் நிலையிலுள்ள அவன் வாழ்க்கையைப்பற்றியும் அதன் பல்வேறு பகுதிகளைப் பற்றியும் நன்கு அறியவேண்டும் அன்றோ? அவ்வாழ்க்கையை அறியும் முறை இரண்டு. முதலாவது அகவாழ்க்கையை அறிந்து பின்னர்ப் புறவாழ்க்கையை அறியலாம். அன்றேல் தலைகீழாகவும் அறியலாம். தொல்காப்பியனார் முதல்வழியை மேற்கொள்கிறார். அகத்திணை இயலில் பொருளதிகாரம் தொடங்குகிறது. அகத்தைப் பற்றிய பொது வான குறிப்புக்கள் மட்டும் இங்கு வருகின்றனவே தவிர முழுவதும் இல்லை. அகம் என்றால் என்ன என்பது பற்றியும், அது எத்தனை வகைப்படும் என்பது பற்றியும், அதன் தொடக்கம் எங்கு என்பது பற்றியும், முடிவு என்ன என்பது பற்றியும் செய்திகள் அகத்திணை யியலில் விரிக்கப்படுகின்றன. அகம் என்பதற்குப் பொருள் கூறவந்த ஆசிரியர் நச்சினார்க்கினியர், "ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக் கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின், அதனை அகம் என்றார்' என்று கூறினார். உள்ளத்தின்கண் தோன்றும் உண்ர்ச்சியையே விரித்தலின் இது அகம் எனப் பெயர்பெற்றது. வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது இவ்விலக்கணம் என முன்பு, கூறினோம் அல்லவா? வாழ்க்கையில் யாண்டும் ஒத்த அன்புடையார் கூடும் கூட்டம்.மட்டுமே உண்டு என்று கூறுதல் பொருத்தமற்றதன்றோ? எனவே ஆசிரியர் ஒவ்வாத தன்மையுடையார் கூட்டத்தையும், கைக்கிளை பெருந்திணை என்ற பகுதிகளில் கூறுகிறார். இவற்றை ஒருங்கே கூறுவதால் வாழ்க்கையை அறிய முற்படுபவன் ‘வாழ்க்கையின் செம்மையான பகுதிய்ையும், தவறான பகுதியையும் அறிய முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/309&oldid=751134" இலிருந்து மீள்விக்கப்பட்டது