பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கியங் கண்ட காவலர் 29
 


அவன் கால மக்கள், அவனுக்கு அறிவுடை நம்பி என்ற அழகிய பெயரளித்துப் போற்றினர். இறுதியில், அவன் பெற்றோர் அவனுக்கு இளமையில் இட்டு வழங்கிய இயற்பெயர் மறைந்து போக, மக்கள் அளித்த அம் மாண்புடைப் பெயரே, அவன் பெயராய் வழங்கலாயிற்று.

அறிவுடை நம்பி ஆண்ட நாடு அமைதி நிலவும் நல்லாட்சியுடைய நன்னாடாம் என அக்காலப் பெரியோர் பலர் பாராட்டியுள்ளனர். அவன் நாடு வளம் பல நிறைந்திருந்தது; அதனால், வறுமை அவன் நாட்டில் வாழமாட்டாது மறைந்து போயிற்று. வறுமை இன்மையால், மக்கள் வயிறார உண்டு பசியறியாப் பெருவாழ்வுடையராயினர். வயிற்றில் பசித் தீ இன்மையால், மக்கள் ஒருவரோடொருவர் பகைத்து வாழ்வதை அறியாராயினர். பகையில்லாமையால், அது காரணமாகத் தோன்றும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் முதலாம் கொடுமைகளும், அக்கொடுங் குணங்களையுடையாரும் அவன் நாட்டில் இலராயினர். இவற்றிற்கு மாறாக அன்பும், அருளும், அறமும், ஒழுக்கமும் அங்கு நிலவின. அவன் நாட்டு மக்கள் அனைவரும் அக் குணங்களால் நிறைந்த ஆன்றோராயினர். நாடு செல்வத்தால் செழித்துச் சிறப்புற்றதோடு, அறிவுடை நம்பியும், அறமல்லன. எண்ணாது ஆண்டான். அந்நாட்டிற்குத் தன் அண்டை நாடுகளால் அழிவு நேராவண்ணம் நின்று காக்கும் ஆண்மையும் உடையவனாயினான். அதனால்,