பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 37



திரையன் ஆண்ட தொண்டை நாடு நிலவளம் பெற்றது; நீர் வளம் உற்றது. அந்நாட்டில் பல்லாண்டு கட்கு முன்னர் விளைந்த பண்டங்கள் தின்ன மாட்டாமல் மண்டிக்கிடக்கும். அவ்விளை பொருள்கள் இட்டு வைக்கப் பெற்ற கூடுகள், அந்நாடு முழுவதும் நின்று காட்சி தரும். ஆண்டு பல கழிந்தமையால், அக் கூடுகள் அழிவுறினும், அக் கூடுகளில் இட்டு வைக்கும் உணவுப் பொருள்கள் மட்டும் அழிவுறாமலே கிடக்கும். திரையன் ஆண்ட தொண்டை நாடு அத்துணை வளம் செறிந்தது.

அவன் நாட்டு நிலங்கள், விளைநிலம் பல பெற்று விளங்கியதைப் போன்றே, அந்நாட்டில் வாழ்ந்த மக்களும் மனவளம் நனிபெற்று விளங்கினர். அவன் நாட்டிற் பிறந்து, சிற்றுார் வாழ்வினராய ஆனோம்பி வாழும் ஆயர்குல மகளிர், பொழுது புலர்வதற்கு முன்னரே எழுந்து, தயிர் கடைந்து முடித்து, மோரும், நெய்யும் கொண்ட கூடையுடன், அண்மையில் உள்ள பேரூருட் புகுந்து, அவற்றை விற்றுப் பணமாக்குவர். அவற்றுள், மோர் விற்றதனால் பெற்ற சில காசுகட்குத் தமக்கும், தம் வீட்டார்க்கும் வேண்டும் உணவுப் பொருள் வாங்குவர். நெய் விற்றுப் பெற்ற பொருள், கை நிறைந்த பெரும் பொருளாதல் கண்டு, தம் வாழ்க்கை வளம் பெருகப் பால் முதலாம் பயன் அளித்துத் துணைபுரியும் பசு, எருமைக் கன்று ஆகியவைகளை வாங்கி வருவர். என்னே தொண்டை நாட்டுப் பெண்டிர் உள்ளம் !