பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62 புலவர் கா. கோவிந்தன்
 


பொய்யாக்கும் மக்கள் இருவர் பிறந்தனர். பிறந்த மக்கள், பழியுடை மக்களாயினர்; தகாவொழுக்க முடையராயினர். தந்தை இருக்கும்போதே, தாம் நாடாளத் துணிந்தனர். மக்கள் மாண்பிலராதல் கண்ட கோப்பெருஞ் சோழன், அவர்பால் அரசுரிமையை அளிக்க அஞ்சினான்; அவர் ஆட்சியில், நாட்டு மக்கள் அல்லல் பல அடைவர்; நாட்டு மக்கள் நலியத் தன் மக்கள் தனியரசு செலுத்துவதை வேந்தன் உள்ளம் வெறுத்தது. அதனால் மக்கள் விருப்பத்தினை மதிக்க மறுத்தான்; அவன் செயல் கண்டு சினந்த அவன் மக்கள், அவன்மீது படையெடுத்து வந்தனர்; படையொடு வந்தார் தன் வயிற்றில் பிறந்தாரே யாயினும், பிழையொழுக்கம் உடையராதலின், அவரை வென்று அடக்கல் அறநெறியேயாகும் எனக் கொண்ட கோப்பெருஞ்சோழன், எதிர்த்தாரை அழித்தொழிக்கத் தானும் படை திரட்டுவானாயினன்.

குடிமக்கள் நலம் குறித்துக் கோப்பெருஞ் சோழன் கொண்ட முடிவு நன்றே யாயினும், ‘கோப்பெருஞ் சோழன், பெற்றெடுத்த மக்களையே பகைவராகக் கொண்டான்!’ என்ற குன்றாப் பழி வந்து நிற்குமே என அஞ்சினர். அவன் அவைக்களப் புலவராய புல்லாற்றுார் எயிற்றியனார், அவனை அப்பழியி னின்றும் காத்தல் தம் தலையாய கடனாம் எனக் கொண்டார்; உடனே, கோப்பெருஞ் சோழன்பால் விரைந்து சென்றார். “வேந்தே! உன்னோடு பகை கொண்டு, போரிட வந்து நிற்கும் அவர்கள் நீ பிறந்த