பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பதிப்புரை


பார்வை எப்படியிருக்கவேண்டும் என்பதை நாவா அவர்கள் தமக்கே உரிய முறையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

மனித இனத்தின் கடந்த கால-நிகழ் கால-வருங்காலம் தொடர்பான அனைத்திற்கும் மார்க்சியத்தில் மதிப்பீடுகருத்து-தெளிவு-தீர்வு தயாராகச் சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கையிலோ, வைத்திருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலோ மார்க்சியத்தைப் பார்ப்பவர்கள் ஏமாற்றமே அடைவார்கள். அதனால்தான், இத்தகையோர் சிலர் மார்க்சியத்தின் போதாமையைப் பற்றிக் கூற முற்பட்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் இதை மார்க்சியத்தின் இயலாமை என்று கூற இன்னும் சற்றுத் தயக்கம் அல்லது அச்சம் கொண்டிருப்பதாலேயே போதாமை என்று பொதுவாக முன்மொழிகிறார்கள். மனித வாழ்வியல் தொடர்பான எல்லாவற்றுக்கும் மார்க்சியம் தயாரான விளக்கங்களை வைத்துக்கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால், மார்க்சியம் இயங்கியல் நோக்குமுறையை-அறிவியல் பார்வையைக் கொடுத்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டு மனித வாழ்வு தொடர்பான எதையும் மதிப்பீடு செய்ய முடியும்; எவற்றுக்கும் கருத்துக்கூற முடியும்; யாவற்றுக்கும் தெளிவு பெற இயலும்; அனைத்திற்கும் தீர்வு காண முடியும்- தீர்வு காணவும் வேண்டும்.

இந்தப் பார்வை எனும் வல்லமையால்தான் தங்கள் தங்கள் காலத்தில் கிடைத்த தரவுகளைக் கொண்டு மார்க்சும் எங்கெல்சும் லெனினும் மாவோவும் இன்னும் எத்தனையோ அறிஞர்களும் உலகைப் படித்தார்கள்.இவர்களும்கூட, கிடைத்த தரவுகளின் பற்றாக்குறையாலோ , தரவுகளைத் தொகுத்துப் பகுப்பதில் இருந்த தடைகளாலோ முழுமையான சில முடிவுகளைத் தரமுடியாமல் போயிருக்கலாம். இதனால் மார்க்சியம் கொடுத்திருக்கிறோமே அந்த அறிவியலே தவராகவிடமுடியாது.

அறிவியலில் குறையும் இருக்க முடியாது; பற்றாக்குறையும் வெளிக்கொண்டு வரவேண்டியனவே இருக்க முடியும். இதுவே மார்க்சியத்துக்கும் பொருந்தும். ஒவ்வொருவரும் மார்க்சியக் கண்களை-அறிவுக் கண்களை முழுமையாக திறந்து பார்த்தால், தேவையானவற்றைக் காண முடியும்.

இந்த அளவில் நம் பங்கினைப் பேராசிரியர் நாவா அவர்கள் சிறப்பாகவே நிறைவேற்றியிருக்கிறார்கள்.

28-10-1999

மே.து. ராசு குமார்