பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

11


“புறவய யதார்த்தத்தின் கலைப்படைப்பே இலக்கியத்தின் உள்ளடக்கம்”.

இவ்வரையறையில் படைப்பாளியின் உள்ளத்திற்கு வெளியே உள்ள புறவய யதார்த்தத்திற்கும் அவனுடைய உள்ளத்தில் அது பிரதிபலிக்கும் அகவயக் கருத்துக்களுக்கும் (படிமம்) உள்ள உறவை நாம் சிந்திக்கிறோம். வேறு சொற்களில் கூறுவதானால் உண்மைக்கும் இலக்கியப் படைப்பிற்கும் உள்ள உறவை இது குறிப்பிடும். சமூகச் சூழலின் உண்மையையும் அது கலைப்படைப்பாக மாறுகிறபோது கலை உண்மையாக உருவாவதையும் நாம் ஒப்பிட்டு ஆராய்கிறோம். உதாரணமாக மாக்சிம் கார்க்கியின் அன்னையில் சமூகச் சூழலின் புரட்சிகரமான தன்மை அக்காலச் சமூக மாந்தர்களிடம் எவ் வளவு தாக்கம் பெற்றிருந்தது என்ற வரலாற்றுண்மை புறவய யதார்த்தம். நூலில் அந்த யதார்த்தம் கலை உண்மையாக மாறும்பொழுது, கதைமாந்தர்கள் எவ்வெவ்வகையில் இப்புரட்சிச் சூழ்நிலையால் பாதிப்புப் பெறுகிறார்கள் என்று காண்பதுதான் இலக்கிய உள்ளடக்கம் பற்றிய ஆராய்ச்சி.

இரண்டாவது, கலைப் பிரதிபலிப்பை அதன் தொடர்புகளோடு ஆராய்வது. அதாவது அன்னையில் கதைமாந்தர்கள் புறவயச் சூழலால் தங்கள் மனதில் பாதிப்பு ஏற்படும்பொழுது அவர்களது உள்ளமும் உணர்ச்சியும் எப்படி மாறுகின்றன, இவை இலக்கியத்தில் எப்படிச் சித்தரிக்கப்பட்டுள்ளன என்ற வினாக்களுக்கு விடையளிக்க நாம் மேற்கொள்ளும் ஆராய்ச்சியை இரண்டாவது வரையறை குறிப்பிடும்.

இவையிரண்டும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. ஆயினும் இவற்றின் பொருள் ஒன்றல்ல. இவை உலகப் உண்மையென்பதை ஏற்றுக்கொள்ளுகின்றன. இக்கொள்கை பிற கொள்கைகளைப்போல கணப்பொழுதுகளையோ, ஆழ் மனத்தையோ, உள்ளக்கிளர்ச்சியையோ இலக்கியத்தின் உள்ளடக்கமாகக் கருதவில்லை. படைப்பாளியின் மனதில் தோன்றுவனவெல்லாம் புறஉலகின் தூண்டுதலால்தான் தோன்றுகின்றன என்று கருதுகின்றன. ஆனால் கலைப்படைப்பு, புறஉலக உண்மை என்னும் சமதளக்கண்ணாடியில் பிரதிபலிப்பது போன்றதல்ல. உள்ளமும் செயலாற்றலுடையது. அதற்கோர் உலகக் கண்ணோட்டம் உள்ளது. அனுபவங்களை வகைப்படுத்தவும் தொகுக்கவும் ஆற்றல் உண்டு. எனவேதான் படைப்புக்குத் தேவையான தனிமக் கூறுகளைப் புறவயச் சூழலில் இருந்து தேர்ந்தெடுத்து தனது உலகக்காட்சி காட்டும் ஒளியில் படைப்பாளி இணைக்கிறான். கலை உண்மை புறவய உண்மையில் இருந்துதான் தோன்றியது. ஆயினும் அது படைப்