பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

13


ளடக்கம். இவ்வுள்ளடக்கம், நாவலாகப் படைக்கப்படும் பொழுது ஒரு கலைஞரின் உள்ளம், மண்ணைத் தங்கமாக மாற்றிவிடுகிறது. எத்தனை கதைமாந்தர்கள் சமூக வரலாற்றுச் சூழலில் வெவ்வேறு விதமாகச் செயல்படுகிறார்கள்? புறவய உண்மைக்கூறுகள் எப்படி ஒரு மாபெரும் இணைப்புத் திட்டத்தில் கலைஞனது மாமேதையால் ஒரு சிற்ப அமைப்பாக உருவாயிருக்கிறது? இதனால்தான் லெனின் அன்னா கரீனினாவைப்பற்றி விமர்சனம் செய்யும்பொழுது, "ரஷியாவின் இதயத்தை டால்ஸ்டாய் உணர்ந்திருந்தது போல வேறு எந்த எழுத்தாளனும் உணர்ந்திருக்கவில்லை. அவரைப்போல ரஷியாவின் சமூக முரண்பாட்டைக் கலைவடிவம் ஆக்கிய மாபெரும் கலைஞர் வேறு எவருமில்லை” என்று எழுதினார். உலகக் கண்ணோட்டத்தில் எத்தனை குறைபாடுகள் இருந்த போதிலும் தனது சமூகக் காட்சிகளை உணரும் திறனாலும் மகோன்னதமான கலைத்திறனாலும் டால்ஸ்டாய் உலக நாவலாசிரியர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்.

பொய்யான உள்ளடக்கம்

எனவே உள்ளடக்கம் என்பது 1 புறவய நிகழ்ச்சிகளையும் 2 அதன் பிரதிபலிப்பையும் குறிக்கும். புற உலகின் நிகழ்ச்சிகள்தாம் கலைப்படைப்பின் மூலஊற்று. ஆனால் அகப்பிரதிபலிப்பு எழுத்தாளனது உள்ளத்தின் உள்ளடக்கத்தைப் பொருத்து வேறுபடும். உதாரணமாக கலைமகளில் வெளிவந்த வேரைத் தொடாத விழுதுகள்’ என்ற நாவலை எடுத்துக்கொள்வோம். இது கேரளத்தில் நிறைவேற்றப்பட்ட நிலச்சீர்திருத்தச் சட்டத்தையும் அதன் விளைவுகளையும் பொருளாகக் கொண்டது. அதன் அகப்பிரதிபலிப்பு எழுத் தாளரது வர்க்கநிலையில் தோன்றிய சிந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளது. "பரம்பரை பரம்பரையாக வரும் தர்மத்தை இச் சீர்திருத்தம் அழித்துவிடுகிறது. தர்மச் சிந்தனையுள்ள ஒரு பிராமணர், தினந்தோறும் உறங்கப் போகுமுன் யாராவது பசித்திருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, அவ்வாறு யாராவது பசித்திருந்தால் சோறு போட்டுக் கதவடைத்து உறங்கப்போகும் பிராமணர் நிலச் சீர்திருத்தத்தால் நிலமிழந்து ஏழையாகி விடுகிறார். அவரது பேரன் பஸ் நிலையத்தில் பிச்சையெடுக்கிறான். இம்மாறுபட்ட காட்சிகள் திறமையாகக் கலைப்படைப்பாக்கப்பட்டுள்ளன. வாசகன் ஆசிரியனுடைய முடிவை ஏற்றுக்கொள்ளும் வகையில் உணர்ச்சி தூண்டப்பட்டுள்ளது. மற்றொரு பிராமணரின் மகள், பட்டினி கிடக்கிறாள். அவர் தனது குடியானவனைப் பார்க்கப்