பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

14


போகிறார். இருபத்தைந்து ஆண்டுகள் ‘விசுவாசமாக உழைத்த மாஜி குடியானவன், தன் குடும்பச் செலவுக்கு தெல் தருவான் என்று நம்பி அவன் வாழும் சேரிக்குப் போகிறார். அவன் லட்சாதிபதியாகியிருக்கிறான். நிலச் சீர்திருத்தம் அவனைப் பெரும் பணக்காரனாக்கியுள்ளது. ஐயரைப் பார்த்ததும் ஏதோ பிச்சை போடுவதுபோல ஒரு மூட்டை நெல் கொடுக்கிறான். தேர்த் திருவிழா, பிராமண நிலச்சுவான்களால் கோலாகலமாக நடத்தப்படும். நிலச் சீர்திருத்தத்தால் பரம ஏழைகளாகிவிட்ட பிராமணர்கள் தேர்த் திருவிழாவிற்குப் பணம் வசூலிக்க முடியவில்லை. தேர் இழுக்கக் கூட்டமும் இல்லை. இந்தப் பிராமணர் தேரில் மண்டையை உடைத்துக்கொண்டு உயிர் விடுகிறார். அவருடைய மகளை அவளுடைய காதலன் கைவிடுகிறான். அவள் விஷம் தின்று உயிர் விடுகிறான். அவர்களது அடைக்கலமாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பப் பெண் திருமணம் செய்துகொள்ளுவான் என்று நம்பி ஒரு பிராமண இளைஞனோடு உறவு கொண்டு கருவுற்றாள்.அவன் கைவிடவே அவளும் விஷம் தின்று உயிர்விடுகிறாள்.

இச்சோக நிகழ்ச்சிகளுக்கெல்லாம் காரணம் நிலச் சீர்திருத்தச் சட்டம்தான் என்ற கருத்தை நாவலில் வலியுறுத்த எண்ணுகிறார் ஆசிரியர். மொத்தத்தில் ஆசிரியரது கருத்து வலுவாகவே கலைப்படைப்பாகியுள்ளது. “சமூக உயர்வு தாழ்வுகள் மாறாமல் இருப்பதுதான் தர்மம். தர்மம் அழியுமானால் வாழ்க்கை அழியும்” என்ற மனுதர்மக் கருத்துக்கள் ஆசிரியரின் மனத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. ஆசிரியரின் சமூகக் கண்ணோட்டம் புற உலக நிகழ்ச்சிகளை வக்கிரமாகக் காண வைத்துள்ளது.

இதற்கு மாறாக கரிசல், இரண்டிடங்கழி, Grapes of wrath, Quite flows the Don போன்ற நாவல்களில் புற உண்மை கலை உண்மையாக மாறுவது எவ்வளவு வேறுபாடாக உள்ள்து? சமூக உண்மையை பொன்னிலன், தகழி, ஷோலக்காவ் முதலிய எழுத்தாளர்கள் எவ்வளவு நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள்? இதற்குக் காரணம் பொதுவான போக்கை (Main Social trend) அவர்கள் ஆய்வின் மூலம் அறிந்திருப்பதும் வர்க்கங்களின் செயல்பாட்டை அவர்கள் உணர்வதும் புற உலகை அறிய ஓர் உலகக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்துவதுமே ஆகும். எழுத்தாளனது உள்ளத்தின் உள்ளடக்கத்தால், கலைப்படைப்பின் தன்மை வேறுபடுகிறது. இக்கருத்தைக் கீழ்வரும் குறியீட்டுச் சூத்திரத்தால் குறிக்கலாம்.