பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

நா.வானமாமலை


விடுதலை கொடுக்கிறார். இந்திரன் தன் ஒருபுறக்காதலைக் காமப்புணர்ச்சியால் நிறைவேற்றிக் கொள்கிறான். அவள் தன் காலத்துச் சமூக மதிப்புகளுக்குள் சிறைப்பட்டு, 'கணவனோடு வாழ்வதே தர்மம், பிறனை வியந்து நோக்குவதே பெரும் பாவம்’ என்ற சமூக மதிப்புகளுக்கு அடிமைப்பட்டு வாழ்கிறாள். பாவத்திற்குரிய தண்டனையை அவள் பெறுகிறாள். ஒரு பெண்ணோடு வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்பதை அகலிகை சாபவிமோசனம் குறிப்பிடுகிறது.

அகலிகை படிமத்தைத் தங்கள் காலத்தில் மாறத்தொடங்கியிருந்த சமூக மதிப்புகளால், பின்னர் தோன்றிய கவிஞர்கள் மாற்றியுள்ளார்கள். அவர்களுடைய சமூகக் கண்ணோட்டம் அகவிகை படிமத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. வான்மீகருக்குப் பின் கம்பன், வெ.ப. சுப்பிரமணிய முதலியார், ச.து.சு. யோகி, ஞானி முதலியோர் மூலப்படிமத்தைத் தங்கள் காலக் கருத்தோட்டத்தில் மாற்றியுள்ளார்கள்.

‘பத்தினி பிறர் நெஞ்சு புகாள்’ என்ற மணிமேகலைக் கருத்து கம்பனில் மாறுகிறது. வஞ்சகத்தால் ஏமாறுவது என்று கம்பனும் அவனுக்குப் பின் தோன்றிய கவிஞர்களும் கருதுகிறார்கள். வான்மீகிக்கு முந்திய கவிஞர் களும் வான்மீகியும், பத்தினி கணவனைத் தவிர வேறொருவர் நிழலைக்கூடப் பார்த்து அழகென்று எண்ணக்கூடாது; எண்ணினால் அவளுடைய கற்பின் சக்திபோய் விடும் என்ற கருத்தில் ஊறியிருந்தார்கள். கல்லாய்க் கிடந்து ராமன் கால் துகள்பட்டு உயிர்த்தெழுந்த அகலிகையைக் கோதமன் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தும் விஸ்வாமித்திரன் வாயிலாக அகலிகை உள்ளத்தால் பிழைப்பிலாள் என்று கம்பன் கூறுகிறான்.

அவனுக்குப் பின் வந்த கவிஞர்கள் இறுக்கமான கற்புநெறியைப் பற்றிய கருத்தை நெகிழ்த்துக்கொண்டே வந்திருக்கிறார்கள். ச.து.சு. யோகி, அகலிகை இந்திரனைச் சேர்ந்தது சரிதான். கோதமன் மணம் செய்துகொண்டதே ஒரு சூழ்ச்சியின் மூலமாகவே. எனவே அவளே முன்னர் காதலித்த இந்திரன் கோதமனை வஞ்சித்ததும் அகலிகை அவனுடைய விருப்பத்துக்கு இணங்கியதும் சரியே என்று வாதிக்கிறார். இக்கருத்தை நிலைதாட்ட அவர் அகலிகை இந்திரன் காதலை வருணிக்கிறார். கோதமன் சூழ்ச்சியையும் வருணிக்கிறார். திருமணம் ஆனபின், அகலிகை பத்தினிச் சிறைபுகுந்து தன்னை மாற்றிக் கொண்டு இந்திரன் தன்னைச் சந்தித்தபோது அவனைக் கடிந்து அனுப்புகிறாள். உணர்ச்சிக்கும் சமூக மதிப்புக்கும் இடையே உள்ள முரண்பாடு. அடங்கிவிட்டது போலத்