பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

நா.வானமாமலை


இருந்தவன் இப்போது சக்கரவர்த்திப் பதவிக்குத் தகுதி பெற்றுள்ளான். அவன் விருப்பத்திற்கு இணங்கலாம் என்று அவள் கருதித் தீயில் புகுந்து மீள்கிறாள். அக்கினித் தேவன் அவளுடைய கற்புத்தீயின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் அவளை ஏற்றுக்கொள்ளும்படி ராமனை வேண்டுகிறான்.

இது பண்டைக் கவிஞர்களின் கருத்தமைப்பு. சீதையின் மனப்போக்கையும் அவளது கற்பின் இயல்பையும் இவ்வாறு சித்தரித்துக் காட்டினார்கள். காலப்போக்கிற்கும் கவிஞனது மன உள்ளடக்கத்துக்கும் ஏற்றபடி சிற்சில படிம விவரங்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆயினும் மரபு வழியாக வந்த சீதைப்படிமம் மேலே சொன்ன இயல்பை முக்கியப்படுத்துகிறது.

குமரன் ஆசான் இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் வாழ்த்தவர். விடுதலைப் போராட்டம் தோற்றுவித்த சமூகப்போராட்டங்களின் பாதிப்புப் பெற்றவர். ஒடுக்கப்பட்ட தீயர் சாதியைச் சேர்ந்தவர். கேரளத்தைவிட்டே சென்று வேறு மாநிலங்களில் வாழும் நிலமைக்கு உள்ளானவர். அச்சாதியாருக்கு விலக்கப்பட்ட வேதங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் படித்தார். புதிய பாதிப்புகள், புதிய மனப் பதிவுகள், புதிய எழுச்சிகள் அவர் மனத்தில் தோற்றுவித்த சிந்தனை உள்ளடக்கத்தின் வழியாகப் பண்டைய சீதையைக் கண்டார். 'சிந்தனையில் ஆழ்ந்த சீதை' என்றதொரு புதிய இதைப்படிமத்தை அவர் படைத்தார். இச்சீதை பழைய கற்பு மதிப்பை மாற்றுகிறாள். இவள் சிந்திக்கிறாள். இவளுடைய இத்தனை இருபதாம் நூற்றாண்டின் அரசியல் சமூக விடுதலை இயக்கங்களின் தாக்கத்தால் தோன்றிய குமரன் ஆசானின் சிந்தனைகளின் வழியே உருவாகிறது.

சீதை தனித்திருக்கிறாள். பர்னசாலைக்கு வெளியே இயற்கையே சிந்திப்பதுபோல அசைவற்றிருக்கிறது. அவளுடைய பிள்ளைகள் லவனையும் குசனையும், வான்மீகர் ராமனிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் மீண்டு வரும் நேரம் ஆகிவிட்டது. பிள்ளைகளை ஏற்றுக்கொள்ளுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கிறது. தன்னை ஏற்றுக் கொள்ளுவானோ மாட்டானோ? மீண்டும் அக்கினிப் பரீட்சையை ராமன் விரும்பினால்... .

சீதை தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை வேகமாகப் படமாக ஒட்டிப்பார்க்கிறாள். சம்பவங்களோடு உணர்ச்சிகளும் சிந்தனைகளும் ஒன்றாவதையும் மோதிக் கொள்வதையும் தன் மனக்கண்ணால் காண்கிறாள். அவற்றுள் மிக முக்கியமானவை வனவாசகாலத்தில் ராமனும் தானும்