பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

19


வாழ்ந்த இன்ப வாழ்க்கையின் நினைவுச்சுவடுகள். அப்போது எவ்வளவு இன்பத்தோடு இருவரும் வாழ்ந்தார்கள்? காரணம் இராமன் சக்கரவர்த்தி அல்ல. மனிதன்தான். தன்னை முழு உணர்ச்சியோடு நேசித்தான். தானும் அவனை நேசித்தாள். தன்னை இராவணன் தூக்கிச்சென்ற காலத்தில் அவன் அனுபவித்த எல்லையில்லாத துன்பத்தை அனுமன் வருணிக்க அவள் கேட்டிருக்கிறாள். மனம் உருகியிருக்கிறாள். தன்னை விடுவிக்கவே ஒரு பெரும்போரை ராமன் தலைமை தாங்கி நடத்தினான்.

இதுவரை, ராமனுடைய உள்ளம் மனித உள்ளமாக, அன்பு, கனிவு, இரக்கம் ஆகிய பண்புகளால் நிரம்பியிருந்தது. அவன் ராவணன் மீது வெற்றி பெற்றான்; சக்கரவர்த்தி தகுதி பெற்றான். இப்பதவி பற்றிய சிந்தனை அவனை மாற்றிவிட்டது. சிறை மீண்டபோது ராமனுடைய கடுகடுப்பான முகமும் அவனது கோரிக்கையும் அவளை அதிர்ச்சியடையச் செய்தன. ஆயினும் அவளுடைய மனத்தில் 'கற்பு' பற்றிய மரபு வழியான தம்பிக்கைகளும் சக்கரவர்த்தியின் மனைவி சந்தேகத்துக்கு அப் பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் அவளை அக்கினிப்பரிட்சைக்கு இணங்க வைத்தன. அப்போதே அக்கினிப்பரிட்சைக்கு இணங்கியிருக்கவேண்டாமோ? இலக்குவன், அனுமன் உள்ளங்களில் அப்போது தோன்றிய அதிர்ச்சிகூட ராமனுக்குத் தோன்றவில்லையே இராமனது மனப்போக்கை இலக்குவன், அனுமனது மன நோக்கத்தோடு சீதை ஒப்பிட்டுப் பார்க்கிறாள். தனது கற்பை, சோதனைக்குட்படுத்தி உலகத்திற்கு நிரூபித்துக்க- விரும்பும் சக்கரவர்த்தியின் ஆணைக்குக் கீழ்படிந்தது தவறுதானே! அன்புக்கும் கருணைக்கும் மதிப்புத் தரவேண்டியதுதான்; இராமனது சக்கரவர்த்திப் பதவிக்கும் அப்பதவி பற்றிய மக்கள் கருத்துக்கும் இவள் ஏன் மதிப்புத் தரவேண்டும்? இவளுக்கும் சக்கரவர்த்தியின் பதவியைப் பற்றியதோர் மாயையான உணர்ச்சி தோன்றியிருக்கவேண்டும். அதனால்தான் தன் கற்பைச் சோதனைக்குள்ளாக்குவதற்கு அவள் சம்மதித்திருக்க வேண்டும்.

பின்னர் அவளுடைய சிந்தனை ராமன் சக்கரவர்த்தியாகி உலகச்சுமைகளை ஏற்று, மனித உணர்ச்சிகளுக்கு இடமில்லாமல் போய்விட்ட நாள்களை நினைத்துப் பார்க்கிறாள். திடீரென்று ஒருநாள் இலக்குவன் கண்ணில் நீர் ததும்பத் தன்னிடம் வந்து ஒரு பிரயாணத்திற்குத் தயாராக இருக்கச் சொல்லி, விட்டுப் போகிறான். சீதை எங்கே பயணம் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. தேர் வருகிறது. சீதை ஏறிக்கொண்டு,