பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

நா.வானமாமலை


கொள்ளும் மெழுகு வார்ப்பாக இல்லாமல் இச்சீதை தன்னம்பிக்கையுடைய தனித்துவம் பெற்றவளாக படைக்கப்பட்டுள்ளாள். இத்தனித்துவம், தன்னை மட்டும் மனித குலத்தில் இருந்து பிரித்து, தன்னையே அழித்துக்கொள்ளும் இயல்பு அன்று. மந்தையோடு மரபுவழியாகச் சில நம்பிக்கைகளைப் பற்றிக்கொண்டிருக்கும் பெண்ணாகச் சீதை படைக்கப்படவில்லை. சமூகச் சூழலையும் ஆண் ஆதிக்கத்தையும் அது எப்பொழுது உச்சமடைகிறது என்பதையும் அறிந்து, மகோன்னதமான பதவி, மனிதப்பண்புகளுக்கு முரணாகச் செல்லும்போது அதனை எதிர்த்து உயிர்விடத் துணியும் முற்போக்கான ஒரு பெண்ணியல்பு குமரன் ஆசானின் 'சிந்தாவிஷ்டயாய சீதை'யில் உருவாகிறது. இது ஆண் பெண். சமத்துவத்தைப் போற்றும் பாரதியின் கருத்துக்களைக் கலைப் படைப்பாக்கியது போல் உள்ளது. பாரதியின் பெண் விடுதலை கருத்து ஏறக்குறைய தேசிய விடுதலை, சமூகவிடுதலை இயக்கங்களின் துவக்க காலத்தில் நமது மகாகவியின் உள்ளத்தில் விழுந்து சுவாலையாகப் பற்றியெரிந்த தீப்பொறி. குமரன் ஆசானின் சீதை அதே காலத்தில் அதே சமூக அரசியல் நிலைமைகளில் உருவான சிந்தனைகளின் கலைப்படைப்பு.

கருத்தும் கலையும்

புதிய சிந்தனைக் கருத்துகள் கவிதைப் பொருள்களாகும் போது அவை வறண்ட கருத்துக்களாகவே இருப்பதில்லை. இக்கருத் மனப்பதிவுகள், தனிமனிதனது அனுபவ முத்திரைகளோடும் உணர்ச்சியோட்டத்தோடும் சேர்ந்து கலக்கின்றன.ஆழ்ந்த சிந்தனை ஆழ்ந்த உணர்ச்சியோடு கலந்து கவித்துவ ஆழத்தை மிகுவிக்கின்றன. புதிய இலக்கியங்களின் சிந்தனைகளைக் கிரகித்துக் கொண்டவர்கள் எல்லோரும் 'புதுமை பெண்' என்ற கவிதையையோ 'சிந்தா விஷ்டயாய' சீதையயோ உருவாக்கிவிடவில்லை. அவர்கள் உறுதியான முடிவுகளுக்கு வந்து பிரச்சாரம் செய்தார்கள்; செயலில் இறங்கினார்கள். வீரகேசவிங்கம், ஈ. வெ. ரா. ஆகியோர் இத்தகைய பிரசாரகர்கள். இதற்கான மனமாற்றத்தை மக்களின் மனத்தில் உருவாக்க, தருக்கத்தையும் உரைநடையையும் கையாண்டார்கள். கவித்துவச் சக்தி கொண்ட ஆசானும் பாரதியும்தான் சக்தி வாய்ந்த கவிதைகள் மூலம் மனமாற்றத்துக்குத் துணை செய்தார்கள். ஸ்துலமான கலைப்படிமங்களின் மூலம் கலைக்கும் யதார்த்தத்திற்கும் உறவை ஏற்படுத்தி யதார்த்தத்தை மாற்ற வழிகாட்டினார்கள்.